டி20 உலகக்கோப்பையில் சரித்திர சாதனை.. 7 ரன்னுக்கு 4 விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்க பவுலர் நோர்ஜே
நியூயார்க் : தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ஜே டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மாபெரும் பவுலிங் சாதனை செய்து இருக்கிறார். இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பை தொடர்களிலேயே மிக சிக்கனமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். வெறும் 7 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன குரூப் "டி" சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டி நடந்த நியூயார்க் மைதான பிட்ச் மிக மோசமாக இருந்ததால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் இலங்கை அணி வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜே மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவர் நான்கு ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதுவே உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ஒருவரின் மிகச் சிறந்த பந்து வீச்சாகும். அது மட்டும் இன்றி உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு ஓவர்கள் முழுமையாக வீசிய பந்து வீச்சாளர்களில் மிக சிக்கனமான பந்து வீச்சையும் பதிவு செய்தார்.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஒரு ஓவருக்கு இரண்டு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் விட்டுக் கொடுத்திருந்தார். தற்போது அன்ரிச் நோர்ஜே ஒரு ஓவருக்கு 1.75 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் விட்டுக் கொடுத்துள்ளார். அவரது அபாரமான பந்து வீச்சால் சுருண்ட இலங்கை அணி 19.1 ஓவர்களில் வெறும் 77 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அந்த அளவுக்கு பிட்ச் மோசமாக இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியும் ரன் குவிக்க திணறியது. அந்த அணியின் வீரர்கள் டெஸ்ட் போட்டி போலவே சேஸிங் செய்து 16.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.


Click it and Unblock the Notifications