அடப்பாவமே.. தோனியின் செல்லப் பிள்ளைக்கே இந்த நிலைமையா? பாரபட்சம் பார்க்காமல் வெளுத்த மார்கிரம்
டெல்லி : தோனியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த மதீஷா பதிரானா தென்னாப்பிரிக்கா அணியிடம் பந்துவீச்சில் செமயாக அடி வாங்கி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த க்விண்டன் டி காக் - ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன் 200 ரன்களுக்கு கூட்டணி அமைத்து இலங்கையை சிதற விட்டனர். இருவருமே சதம் அடித்தனர்.

அடுத்து வந்த எய்டன் மார்கிரம் மற்றும் ஹென்ரிச் கிளாசன் தங்களுக்கே உரிய அதிரடி ஆட்டத்தை கட்டவிழ்த்து விட்டனர். கிளாசன் 20 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். மார்கிரம் அதிரடி ஆட்டம் ஆடி சதம் கடந்தார். அவரது அதிரடி ஆட்டத்திலேயே முக்கியமான சம்பவம் நம் தோனியின் கண்டுபிடிப்பான பதிரானாவின் ஓவரில் தான் நடந்தது.
43வது ஓவரை பதிரானா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கிளாசன் 1 ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை மார்கிரம் வசம் கொடுத்தார். மார்கிரம் இரண்டாவது பந்தில் ஃபோர் அடித்தார். மூன்றாவது பந்தில் யார்க்கர் வீசுகிறேன் என கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஸ்டம்ப்பை விட்டு தள்ளி வீசி விட்டார் பதிரானா. அந்த பந்தை விக்கெட் கீப்பரால் கூட பிடிக்க முடியவில்லை. பந்து வைடு மற்றும்
ஃபோர் சென்றது.
அடுத்து அந்த ஓவரின் மூன்றாவது, நான்காவது மற்றும் கடைசி பந்தில் ஃபோர் அடித்தார் மார்கிரம். அந்த ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தது. இந்தப் போட்டியிலேயே இதுதான் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர். அந்த ஓவருக்கு முன் பதிரானா 7 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால், அந்த ஓவருக்கு பின் 8 ஓவர்களில் 79 ரன்கள் கொடுத்து இருந்தார்.
பதிரானா 10 ஓவர்கள் முடிவில் 95 ரன்கள் கொடுத்து சதத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டு இருந்தார். தோனியின் செல்லப் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலையா? என தோனி ரசிகர்கள் வருத்தப்படும் நிலைக்கு ஆளாகி விட்டார் யார்க்கர் புயல் பதிரானா.
மார்கிரம் 49 பந்தில் சதம் கடந்தார். 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications