SA vs SL: முதல் சதத்தை விளாசிய ரிக்கல்டன்.. கேப்டன் இன்னிங்ஸை ஆடிய பவுமா.. சோர்ந்துபோன இலங்கை அணி!
குவாபெர்ஹா: இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் ரிக்கல்டன் 250 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்ற நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வென்றாலே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தகுதிபெற முடியும்.

இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மார்க்ரம் - சோர்ஸி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே சோர்ஸி டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த இளம் வீரர் ஸ்டப்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரிக்கல்டன் மற்றும் கேப்டன் பவுமா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணி பவுலர்கள் விரக்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த நிலையில், இருவரும் அரைசதம் கடந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய டெம்பா பவுமா 109 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த பெடிங்ஹம் 6 ரன்களிலும் வெளியேறினார். இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். பின்னர் அவர் 250 பந்துகளில் 11 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யான்சன் 4 ரன்களில் வீழ்ந்தார்.
பின்னர் வெரைன் மட்டும் 48 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. நாளைய ஆட்டத்தில் இலங்கை அணி முதல் செஷனிலேயே தென்னாப்பிரிக்கா அணியை ஆல் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Thursday, December 5, 2024, 22:15 [IST]
Other articles published on Dec 5, 2024


Click it and Unblock the Notifications