Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs WI: இந்தியாவுக்கு உதவி செய்த தென்னாப்பிரிக்கா.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபாரம்

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்று எளிதாகியுள்ளது.

இந்தியாவுக்கு என்ன லாபம்?

முன்கூட்டியே கணிக்கப்பட்டபடி, ஒருவேளை இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியிருந்தால், குரூப் 1 பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெறும் சூழல் உருவாகியிருக்கும். அப்போது எந்த அணியின் நிகர ரன் ரேட் அதிகமாக உள்ளதோ அந்த இரண்டு அணிகளே அரையிறுதிக்குச் செல்லும் என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கும். இந்திய அணி ரன் ரேட்டில் மைனஸில் இருப்பதால் அது பெரும் பின்னடைவாக அமைந்திருக்கும்.

ஆனால், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதால் அந்த அணி தனது அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இதனால், இந்திய அணி தனது மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்குச் சென்றுவிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

SA vs WI South Africa Beats West Indies in T20 World Cup 2026 Major Boost for India s Semifinal Hopes

சரிவிலிருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பிராண்டன் கிங் 21 ரன்களும், ஷாய் ஹோப் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மன் பவல் போன்ற அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஜேசன் ஹோல்டர் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெப்பர்டு 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கோர்பின் போஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்காவின் எளிதான வெற்றி

பின்னர் 177 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே மிகச் சிறப்பாக அமைந்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய டி காக் 24 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த ரியான் ரிக்கல்டன் ஆட்டத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத இந்த ஜோடி எளிதாக ரன் சேர்த்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் எய்டன் மார்க்ரம் 46 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரிக்கல்டன் 28 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 16.1 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காத அணியாகத் தென்னாப்பிரிக்கா வலம் வருகிறது. தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றியால், இன்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எவ்வித ரன் ரேட் அழுத்தமும் இன்றி நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, February 26, 2026, 18:34 [IST]
Other articles published on Feb 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+