SA vs ZIM: தென் ஆப்பிரிக்கா பிரம்மாண்ட வெற்றி.. சொந்த மண்ணில் வரலாற்று தோல்வி அடைந்த ஜிம்பாப்வே
புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் விரைவாக ரன் சேர்த்து முதல் நாள் ஆட்டத்திலேயே 90 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்திருந்தனர். அந்த அணியில் அறிமுகமான லுவான் பிரிட்டோரியஸ் தனது முதல் போட்டியிலேயே 160 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தார். அடுத்து பிரவீஸ் 37 பந்துகளில் அரை சதம் அடித்து, 41 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எட்டாம் வரிசையில் இறங்கிய கார்பின் போஷ் 100 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது தென் ஆப்பிரிக்கா அணி 418 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.

அடுத்து ஜிம்பாப்வே அணி விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் 137 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் வியான் முல்டர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் கேசவ் மஹராஜ் மற்றும் கோடி யூசுப் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி அபாரமாக ரன் குவித்தது. மூன்றாம் வரிசையில் இறங்கிய வியான் முல்டர் சதம் அடித்து ரன் சேர்த்தார். அவர் 147 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயம் செய்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட மிகப்பெரிய இலக்கு இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 328 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவின் கார்பின் போஷ் பந்துவீச்சிலும் அபாரமாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து ஜிம்பாப்வே அணி தனது டெஸ்ட் வரலாற்றிலேயே ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைப் பதிவு செய்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications