புல்வாயோ: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இல்லாததால் தென்னாப்பிரிக்கா அணியில் பல முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா அணியின் தற்காலிக கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டிருக்கிறார். புவால்யோவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் வியான் முல்டர் 264 ரன்கள் என்ற தன்னுடைய ஸ்கோருடன் தொடங்கினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 297 பந்துகளில் வியான் முல்டர் முச்சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி கட்டியவர் 324 பந்துகளில் 350 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் தான் நடைபெறுகிறது என்பதால் பிரையன் லாராவின் 400 ரன்கள் ஸ்கோரை வியான் முல்டர் முறியடிப்பார் என உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
367 ரன்கள் எடுத்து முல்டர் களத்தில் இருந்தார்.அவர்தான் கேப்டன் என்பதால் அவர் நினைத்து இருந்தால் 400 ரன்களை கடந்திருக்க முடியும். ஆனால் வியான் முல்டர் ஆட்டத்தை டிக்ளேர் செய்து கொள்வதாக அறிவித்தார். ஐந்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 626 ரன்கள் எடுத்திருந்த போது முதலில் முடித்துக் கொண்டது. இதற்கு பலரும் 400 ரன்கள் என்ற சாதனையை உடைக்க வாய்ப்பு இருந்தும் ஏன் அதனை வியான் முல்டர் தவறவிட்டார் என்று கேள்விகளை கேட்டு வந்தனர்.
இதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "முதலில் நான் என்ன நினைத்தேன் என்றால், நாங்கள் தேவையான ஸ்கோரை எடுத்து விட்டோம். எனவே பந்து வீச இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். மற்றொன்று காரணம் பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் அவருடைய சாதனைகள் உடைக்கப்படாமல் இருக்கட்டும். அவர் 400 எடுத்திருந்தார். அதுவும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருக்கின்றார்."
"அந்த இன்னிங்ஸ் உண்மையிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் போன்ற ஜாம்பவானுக்கு தான் இந்த ரெக்கார்ட் ஸ்பெஷலாக இருக்கும். எனக்கு மீண்டும் இது போல் 400 ரன்களைக் கடக்க வாய்ப்பு இருந்தால், நிச்சயம் நான் மீண்டும் இதே முடிவை தான் எடுப்பேன். இது குறித்து நான் என்னுடைய பயிற்சியாளர் இடமும் கூறிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார்."
"லாரா போன்ற ஜாம்பவான்களுக்கு அது போன்ற பெரிய ஸ்கோர் உரிதாக இருக்கட்டும் அதேபோல் நான் டிக்ளேர் செய்யாமல் விளையாடி இருந்தால் என்ன ஆகிருக்கும் என்று யாராலும் உறுதியாக சொல்லி இருக்க முடியாது. ஆனால் லாராவின் ரெக்கார்ட் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். என்னுடைய இன்னிங்ஸ் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை."
"ஆனால் முச்சதம் தற்போது அடித்திருக்கின்றேன். அதைவிட முக்கியம் எங்கள் அணி தற்போது நல்ல நிலையில் இருக்கின்றது. நான் தென்னாபிரிக்கனிக்காக விளையாடும் போது கூட நான் ஒரு நல்ல வீரராக இல்லை என்று தான் நினைக்கின்றேன். ஆனால் பல மிகப்பெரிய வீரர்களுடன் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி என்னுடைய பேட்டிங்கை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. என்னுடைய குறைகளை நிவர்த்தி செய்ய அது ஒரு வாய்ப்பாக நான் பார்த்தேன்."
"பல விஷயங்களை இங்கிலாந்து நான் கற்றுக் கொண்டேன். ஹசிம் அம்லாவின் சாதனையை நான் கடந்து சென்ற போது முதலில் நான் கவனிக்கவில்லை. அதன் பிறகு தான் தெரிந்தது அதை நான் ஸ்பெஷல் ஆக உணர்கிறேன்" என்று வியான் முல்டர் கூறினார். கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அசிம் அம்லா 311 ரன்கள் குவித்தார். இதுவே தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது. தற்போது அதனை வியான் முல்டர் முறியடித்து இருக்கின்றார்.