பார்ல்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி விசித்திரமான டி20 சாதனையை செய்தது. ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் இதுவரை எந்த ஒரு டி20 போட்டியிலும் 20 ஓவர்களையும் ஸ்பின்னர்கள் மட்டும் வீசியதில்லை. முதன்முறையாக பார்ல் ராயல்ஸ் அணி அந்த சாதனையை செய்து, வெற்றியும் பெற்று இருக்கிறது.
2025 எஸ்ஏ டி20 தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகவும் மந்தமான பிட்ச் என்பதால் பார்ல் ராயல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர். இந்த நிலையில் அனுபவ பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதலில் நிதானமாக ஆடத் துவங்கி பின்னர் அதிரடியாக ரன் சேர்த்தார்.

அவர் துவக்க வீரராக இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றார். 56 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து இருந்தார். 8 ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார். இதை அடுத்து பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்து இருந்தது.
அடுத்து பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி சேசிங் செய்ய வந்தது. அப்போது முதல் ஓவர் முதல் 20 வது ஓவர் வரை சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது பார்ல் ராயல்ஸ் அணி. பியான் பார்ச்சூன், டுனித் வெள்ளாளகே, முஜிபுர் ரஹ்மான், பீட்டர் மற்றும் ஜோ ரூட் ஆகிய ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களும் 20 ஓவர்களை வீசி முடித்தனர்.
இதன் மூலம் கிரிக்கெட் உலகில் பார்ல் ராயல்ஸ் அணி புதிய சாதனையை படைத்தது. பியான் இரண்டு விக்கெட்டுகளையும், ஜோ ரூட் இரண்டு விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வெள்ளாளகே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ரன் குவிக்க முடியாத சூழ்நிலையை பார்ல் ராயல்ஸ் அணி தெளிவாகப் பயன்படுத்தியது. அதன் மூலம் இந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.