மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்குள் தோனி எப்படி வந்தார் என்பது குறித்து அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆன எம் எஸ் தோனி படத்திலேயே காட்டி இருப்பார்கள்.
இந்த நிலையில் தோனி எவ்வாறு அணிக்குள் வந்தார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் யாருக்கும் தெரியாத விஷயங்களை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் தோனியை தாம் ரஞ்சிப் போட்டியில் விளையாடும் போது தான் முதல் முறையாக பார்த்ததாக குறிப்பிட்டார். அப்போது தோனி ஆடிய விதத்தை பார்த்து தான் மிகவும் கவரப்பட்டதாகவும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தோனி பிரித்து மேய்ந்து விட்டதாகவும் சபா கரிம் கூறியுள்ளார்.
எனினும் தோனி விக்கெட் கீப்பராக சில தவறுகளை செய்ததாக சுட்டிக்காட்டிய சபா கரிம், இது தொடர்பாக தோனி இடமே தாம் சென்று சில அறிவுரைகளை கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் தோனி இந்திய அணிக்குள் வர கென்யாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடர் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
இந்தியா ஏ,பாகிஸ்தான் ஏ, கென்யா ஏ ஆகி அணிகள் பங்கு பெற்ற அந்த தொடரில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட சபா கரிம், முதலில் இந்தியாவுக்காக இந்த தொடரில் விளையாட தினேஷ் கார்த்திக் தான் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார். எனினும் தினேஷ் கார்த்திக் அப்போதே இந்திய தேசிய அணியில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வழி இல்லாமல் தோனி அந்த தொடரின் பங்கேற்க வந்ததாகவும் சபா கரிம் கூறினார்.
அந்தத் தொடரில் தான் தோனி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே பட்டையை கிளப்பி தமது வருகையை கிரிக்கெட் உலகத்திற்கு அறிவித்தார் என்றும் சபா கரிம் கூறினார். தோனி வாழ்க்கையில் அது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும் தோனியின் இந்த ஆட்டம் குறித்து கங்குலியிடம் தான் கூறியதாகவும் சபா கரிம் தெரிவித்தார்.இப்படிப்பட்ட விக்கெட் கீப்பர் நிச்சயம் அணிக்கு தேவைப்படுவார் என்று கங்குலியிடம் தாம் முறையிட்டதாகவும் சபா கரிம் தெரிவித்தார்.