உங்களுக்கு சச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்.. 2 மறக்க முடியாத சம்பவங்கள் நடந்த நாள்!
மும்பை : சச்சினின் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று. ஆம், நவம்பர் 15 தான் சச்சின் தன் கிரிக்கெட் வாழ்வை தொடங்கினார். அது மட்டுமல்ல...
24 வருடங்கள் கழித்து அதே நவம்பர் 15இல் தான் சச்சின் தன் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடினார்.
சச்சினுக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் நவம்பர் 15 மறக்க முடியாத நாளாக மாறி விட்டது.

16 வயது பாலகன் சச்சின்
நவம்பர் 15, 1989 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் சச்சின். அன்று பதினாறு வயது பாலகனான அவர், பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் உள்ளிட்டோரை எதிர் கொண்டார். வக்கார் யூனிஸ் பந்தில் 15 ரன்களுக்கு வெளியேறினார்.

தடுமாறிய இளம் சச்சின்
சச்சின் அறிமுகமான 1989இல் பாகிஸ்தான் அணியால் கிண்டல் செய்யப்பட்டார். "என்ன வீட்ல அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்த?" என பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் கேலி செய்கிறார். பாகிஸ்தான் அணியின் பவுன்சர்களை, ஸ்விங்கர்களை சந்திக்கவே தடுமாறினார் அன்றைய சச்சின்.

சொந்த மண்ணில் கடைசி போட்டி
அதன் பின் சுமார் 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய பின் சச்சின் என்றால் ஒரு மரியாதை, கிரிக்கெட் கடவுள் என அவரது ரசிகர்களின் புகழ் வார்த்தைகள் தான் நம் நினைவுக்கு வந்தது. 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியது போதும் என சச்சின் நினைத்த போது, பிசிசிஐ அவருக்காக அவர் சொந்த மண்ணான மும்பையில் தன் கடைசி போட்டியை ஆடி நிறைவு செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தது.

சகாப்தம் முடிவுக்கு வந்தது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது. சச்சின் தன் 200வது டெஸ்ட் போட்டியை ஆடினார். அந்த போட்டியின் இரண்டாம் நாளில், நவம்பர் 15 அன்று, தன் கடைசி இன்னிங்க்ஸில் 74 ரன்கள் அடித்தார் சச்சின். அப்போது அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ஒட்டுமொத்த வான்கடே மைதானம் முழுவதும் எழுந்து நின்று கைதட்டிக் கொண்டு இருந்தது. ஒரு கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications