சச்சினுக்கு பெரிய மனசுப்பா! தீபாவளி அன்று ப்ரித்வி ஷாவுக்கு பயிற்சி கொடுத்த சச்சின்
மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் அட்டகாசமான அறிமுகம் பெற்ற ப்ரித்வி ஷா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
ப்ரித்வியின் ஆதர்ச நாயகனான சச்சின் முன்னிலையில் ப்ரித்வி ஷா பயிற்சி மேற்கொண்டது தான் இதில் முக்கியமான செய்தி.
சச்சின் மிகப் பெரிய கிரிக்கெட் வீரர் என்ற எந்த பகட்டும் இல்லாமல், இளம் இந்திய வீரருக்கு அறிவுரைகள் கூறியுள்ளது சச்சின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சாதனை சதம் அடித்த ப்ரித்வி
ப்ரித்வி ஷா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அணியில் இடம் பிடித்தாலும், களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தன் டெஸ்ட் அறிமுக வாய்ப்பை பெற்றார். அந்த தொடரில் கலக்கிய அவர், முதல் போட்டியில் 154 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். தன் முதல் சதத்தை 99 பந்துகளில் அடித்தார். அந்த முதல் சதத்தால் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

சச்சினுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 237 ரன்கள் குவித்த ப்ரித்வி ஷா, தொடரின் சிறந்த வீரர் விருதையும் வென்றார். இதையடுத்து ப்ரித்வி ஷாவை, சச்சின், சேவாக் உள்ளிட்ட ஜாம்பவான் பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட்டு பேசத் துவங்கினர் ரசிகர்கள்.
தீபாவளியன்று பயிற்சி செய்த ப்ரித்வி
அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த அணியிலும் இடம் பிடித்தார் இளம் ப்ரித்வி ஷா. இதற்கிடையே ரஞ்சி தொடரில் காயம் காரணமாக ப்ரித்வி ஷா முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் சச்சினுடன் சேர்ந்து தீபாவளி அன்று பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அறிவுரைகள் சொன்ன சச்சின்
அதன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் சச்சின் ப்ரித்வி ஆடுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறார். இடையே சச்சினும் ப்ரித்விக்கு பந்து வீசி உள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அறிவுரைகள் கூறியதாகவும் தெரிகிறது. நடப்பதை எல்லாம் பார்த்தால், ப்ரித்வி ஷா அடுத்த சச்சின் என பலரும் கூறுவது உண்மை தான் போல..


Click it and Unblock the Notifications