இந்தூர்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 25 வயதிற்குள் ஒரே ஆண்டில் 5 சதங்களை விளாசிய 5வது வீரர் என்ற சாதனையை இளம் வீரர் சுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கிங் என்று கொண்டாடப்பட்டால், இளம் வீரர் சுப்மன் கில் பிரின்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஜாம்பவான் வீரரான விராட் கோலியின் இடத்தில் சுப்மன் கில்லா என்று ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தான் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் அந்த அடைமொழிக்கு ஞாயம் சேர்த்து வருகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் சுப்மன் கில். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசி அசத்தியுள்ளார் சுப்மன் கில்.
வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரட்டை சதம் மற்றும் சதம் என்று நடப்பாண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் முக்கியமான 4 அணிகளுக்கு எதிராக சதம் விளாசி இருக்கிறார். அதிலும் வெறும் 35 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் அடித்திருப்பது தான் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் 25 வயதிற்குள் ஒரே ஆண்டில் 5 சதங்கள் விளாசிய 5வது வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன் 1996ல் சச்சின் டெண்டுல்கர், 2005ல் கிரேம் ஸ்மித், 2006ல் உபுல் தரங்கா, 2012ல் விராட் கோலி ஆகியோர் மட்டுமே 25 வயதாவதற்குள் ஒரே ஆண்டில் 5 ஒருநாள் சதங்களை விளாசி இருக்கிறார்கள்.
அதேபோல் 35 இன்னிங்ஸ்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய ஹசிம் அம்லா சாதனையையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார். 35 இன்னிங்ஸ்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஹசிம் அம்லா 1,844 ரன்களும், இந்திய அணியின் சுப்மன் கில் 1,891 ரன்களும் விளாசி இருக்கிறார். ஒரேயொரு சதத்தால் இத்தனை சதங்களை சுப்மன் கில் படைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.