"கோடிக்கணக்கான இதயங்களை வென்றுவிட்டீர்..." திபா கர்மாகருக்கு 'கடவுள்' ஆறுதல்
டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகருக்கு கிரிக்கெட் கடவுள் சச்சின் ஆறுதல் தெரிவித்துள்ளார். தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் டெண்டுல்கர் "நீ கோடிக்கணக்கான இதயங்களை வென்றுவிட்டாய்" என திபா கர்மாகருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை திபா கர்மாகர் 4-வது இடம் பிடித்தார். அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தி நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டார். மொத்தமாக இவர் 15.066 புள்ளிகள் பெற்றார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "130 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், மிகக் கடினமாக முயற்சித்தேன். முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என மிக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய வீராங்கனை சாதனை நிகழ்த்தியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் அவரது ட்வீட்டை பலரும் பகிர்ந்து அவருக்கு ஆதரவும் ஊக்கமும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சச்சின் டெண்டுல்கர் தமது ட்விட்டர் பக்கத்தில், வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. இப்போது நீங்கள் கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளீர்கள்.. உங்கள் சாதனையால் இந்த தேசமே பெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications