சச்சினின் சுயசரிதை நூல் நவம்பர் 6ல் ரிலீஸ்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் எழுதிய சுயசரிதை நூல் நவம்பர் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக 100 சதங்கள் என்ற ஒருவரும் எளிதில் முறியடிக்க முடியாத மைல்கல்லை எட்டியவர்.
இவர் தனது வாழ்க்கை வரலாற்றினை "Playing It My Way-My Autobiography" என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இவரது சுயசரிதை நூல் அவர் மும்பை புறநகர்ப்பகுதிகளில் தெருவிலும் சந்துகளிலும் ஆடிய கிரிக்கெட் முதல் 16 வயதில் டெஸ்ட் விளையாடிய அனுபவத்தைத்தொட்டு, 100வது சதம் எடுத்து சாதனை புரிந்தது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட உணர்வுகள் வரை அனைத்து விஷயங்களையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதாக நூல் வெளியீட்டு நிறுவனமான ஹாடர்&ஸ்டவ்டன் தெரிவித்துள்ளது.

நேர்மையான பதிவு
சச்சின் டெண்டுல்கரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களையும், கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்களையும் நேர்மையாக, இதுவரை வெளிவராத தகவல்களுடன் பதிவு செய்திருப்பதாக வெளியீட்டு நிறுவனத்தின் ஆசிரியர் ராடி புளூக்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 6ல் ரிலீஸ்
சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூல் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் ஹாடர்&ஸ்டவ்டன் தெரிவித்துள்ளது,

பகிர்ந்து கொள்ளாத விசயங்கள்
"எனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான் பேசியாக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்.

ஆரம்பம் முதல் முடிவு வரை
இதோ நான் எனது கடைசி இன்னிங்ஸின் முடிவில் நின்று கொண்டிருக்கிறேன், கடைசியாக பெவிலியன் நோக்கி நடைபோடும் போது முதன் முதலாக கிரிக்கெட் மட்டையை தொட்ட காலம் முதல் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சுயசரிதை அந்த அடிப்படையில் எழுதப்பட்டதே" என்று சச்சின் தனது சுயசரிதை நூல் பற்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications