அதிகாரபூர்வமற்ற விளையாட்டுத்துறை அமைச்சராக சச்சின் பணியாற்ற வேண்டும்: பி.டி. உஷா
மும்பை: சச்சின் டெண்டுல்கர் அதிகாரபூர்வமற்ற விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டு மற்ற விளையாட்டுகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரபல ஓட்டப்பந்தைய வீராங்கனை பி.டி.உஷா கூறியுள்ளார்.
இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையான பி.டி.உஷா தற்போது தடகள விளையாட்டின் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்திய கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பு வெளியானதும், இவர் சச்சின் குறித்த தனது கருத்துகளைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

சச்சின் கையால் கவுரவம்
1977-ம் ஆண்டு முதல் 2000-வது ஆண்டு வரை ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த தன்னை இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டுப் பெண்மணியாக மத்திய அரசு கவுரவித்தது. அந்தப் பரிசு சச்சின் கையால் தனக்கு அளிக்கப்பட்டது.

25 ஆண்டுகளாக…
கடந்த 25 வருடங்களாக கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை சச்சின் உயர்த்தியுள்ளார். எந்த சமயத்திலும் சச்சின் விமர்சனங்களைத் தவறாக எடுத்துக் கொண்டதில்லை என்றார்.

சர்ச்சையில் சிக்காத நாயகன்
பெற்றோர், மனைவி, குழந்தைகளை விட்டு தொடர்ந்து வெளியில் இருக்க நேரிட்டபோதிலும் விளையாட்டு ஒன்றை மட்டுமே அவர் குறிக்கோளாகக் கொண்டு எந்த சர்ச்சைகளிலும் அவர் சிக்காமல் இருந்தார்.

மற்ற விளையாட்டுக்களில்
கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனைகள் அனைவராலும் என்றும் போற்றப்படும். கிரிக்கெட் விளையாட்டு தற்போது மக்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளதால் ஓய்வு பெற்றபின் சச்சின் மற்ற விளையாட்டுகளிலும் தனது கவனத்தை செலுத்தவேண்டும்.

விளையாட்டுத்துறை அமைச்சராக
அவர் தற்போது ராஜ்யசபை உறுப்பினராகவும் உள்ளார். அதனால் அவர் அதிகாரபூர்வமற்ற விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டு மற்ற விளையாட்டுகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு விளையாட்டுகளின் கூட்டமைப்புகளுடனும் இணைந்து அவர்களின் பிரச்சினைகள் நீங்கும் வகையில் சச்சின் செயலாற்றினால் அவரது முக்கியத்துவம் மேலும் பாராட்டப்படும் என்று கூறிய உஷா, சச்சினின் இந்த செயல்களுக்கு உதவி புரிய தான் முன்நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications