எனக்கு இவரை பார்த்தால் ரொம்ப பயம்.. சாய் சுதர்சன் பரபரப்பு கருத்து
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்குத் தான் மிகவும் பயப்படுவதாக இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் தொடரில் அறிமுகமானதில் இருந்தே ஆஷிஷ் நெஹ்ரா அதன் தலைமை பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.
சாய் சுதர்சனும் அதே ஆண்டில் தான் தனது ஐபிஎல் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். மைதானத்தில் நெஹ்ரா மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டாலும், அவரது பயிற்சியின்கீழ் குஜராத் அணி 2022-ல் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், 2023 மற்றும் 2026 சீசன்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. இதற்கிடையில், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் தலா 700-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து, அணியின் தவிர்க்க முடியாத தூணாக சாய் சுதர்சன் உருவெடுத்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அணியில் யாருக்கு அதிகமாகப் பயப்படுவீர்கள் என்ற கேள்விக்கு சாய் சுதர்சன் , "ஆஷிஷ் நெஹ்ரா. அவருக்குள் அசாத்திய கிரிக்கெட் அறிவு உள்ளது. ஆனால் சில நேரங்களில் அவர் என்னைப் பயமுறுத்துகிறார். அதே சமயம், அவர் மிகவும் ஜாலியான மனிதர், அனைத்து வீரர்களுக்கும் தந்தை போன்றவர்."என்று கூறினார்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில்லுடனான தனது நட்பு குறித்து சாய் சுதர்சன் நெகிழ்ச்சியுடன் பேசிய அவர். "நான் முதன்முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வந்தபோது, அவரைத் தான் எனது முன்மாதிரியாகப் பார்த்தேன். எனது இரண்டாவது ஆண்டில், நான் சிறப்பாக விளையாடிய போதிலும், அணியின் காம்பினேஷன் காரணமாக சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தேன்.
அந்தச் சமயங்களில் அவர் எப்போதும் என்னிடம் வந்து பேசி, நான் மேம்படுத்த வேண்டிய சிறிய விஷயங்களைச் சுட்டிக்காட்டுவார். அவருடன் எனக்கு மிகச் சிறந்த நட்பு உள்ளது. எனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் அவரைத் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் இணைந்து இந்திய அணியிலும் விளையாடுவது எனக்குக் கிடைத்த பாக்கியம்" என்று சாய் சுதர்சன் கூறினார். சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி ஐபிஎல் வரலாற்றிலேயே 11 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வீரர்களுக்கு தங்களை வெளிப்படுத்த முழு சுதந்திரம் அளிப்பவர் என்று சாய் சுதர்சன் பாராட்டியுள்ளார். கம்பீர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகமானார். "ஒரு அணியில் உள்ள வீரருக்கு மிக முக்கியமான விஷயம், தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு தான். கௌதம் கம்பீர் 'உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய், நான் உனக்கு உறுதுணையாக இருப்பேன்' என்று கூறக்கூடிய மனிதர்.
அதுவே எனக்காக விளையாடாமல், அணிக்காக விளையாட எனக்கு உதவுகிறது. வீரர்கள் தங்களை எளிதாக வெளிப்படுத்தும் சூழலை அவர் உருவாக்குகிறார். அவர் வீரர்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்" என்று சாய் சுதர்சன் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அறிமுகப் போட்டிக்குப் பிறகு, சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இருந்து வருகிறார். 24 வயதான அவர், இதுவரை விளையாடியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதங்களுடன் சற்றே ஏமாற்றமளிக்கும் விதமாக 31.91 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

