தமிழக வீரருக்கு எதிராக திரும்பிய ஆவரேஜ்.. இதுதான் சாக்கு.. வாட்டர் பாய் ஆக்கப்படுவாரா சுதர்சன்?
லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் 2025 ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி 759 ரன்கள் சேர்த்தார். இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். மேலும், பல்வேறு விருதுகளையும் வென்று அசத்தினார்.
ஆனால், முதல் தரத் டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 40க்கும் கீழே உள்ளது. அவர் இதுவரை 29 முதல் தரப் போட்டிகளில் 49 இன்னிங்ஸ்களில் விளையாடி 1957 ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் பேட்டிங் சராசரி 39.93 ஆகும். 7 சதங்கள் மற்றும் 5 அரை சதங்களை அடித்திருக்கிறார்.

ஆனால், அவர் தனது துவக்க காலத்தில் மோசமாக விளையாடியதாலேயே அவரது பேட்டிங் சராசரி இந்த அளவுக்கு இருக்கிறது. அவர் கடைசியாக விளையாடிய 2024-25 ரஞ்சி டிராபி தொடரில் 76 என்ற பேட்டிங் சராசரியுடன் ஆடி இருந்தார். இரட்டை சதத்தையும் அடித்து இருந்தார். அப்போது இரண்டு நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்தது கிரிக்கெட் உலகில் அதிக பாராட்டுகளைப் பெற்றது.
ஆனால், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க பல வீரர்களும் முட்டி மோதி வருகின்றனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல், கருண் நாயர், ரிஷப் பண்ட் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி என கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட இந்த பேட்டிங் வரிசையுடன் மாற்று வீரர்களாக துருவ் ஜுரல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.
இந்த போட்டிக்கு இடையே சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது. அவருக்கு வாய்ப்பளிக்காமல் போவதற்கு அவரது ஒட்டுமொத்த முதல் தர பேட்டிங் சராசரி ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படலாம் என்ற நிலை உள்ளது. சாய் சுதர்சன் இங்கிலாந்து மண்ணில் வாட்டர் பாயாக மட்டுமே பயன்படுத்தப்படுவாரா? என்ற கேள்வி உள்ளது.
எனினும், அவரது சமீபத்திய பேட்டிங் ஃபார்மைக் கருத்தில் கொண்டும், கவுண்டி தொடர்களில் இங்கிலாந்து மண்ணில் அவர் ஏற்கனவே விளையாடி இருக்கும் அனுபவத்தை மனதில் வைத்தும், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிளேயிங் 11-இல் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications