
ஆண்டு சம்பளம்
பிசிசிஐ தான் உலக கிரிக்கெட்டிலே பணக்கார விளையாட்டு அமைப்பு என்று நம் அனைவருக்கும் தெரியும். வீரர்களுக்கான ஊதியம் கொடுப்பதில் பிசிசிஐ கஞ்சத்தனம் காட்டியது கிடையாது. ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒப்பந்த முறைப்படி தனியாக ஆண்டு சம்பளம் கிடைக்கும். குறிப்பாக a+ கிரேடில் உள்ள வீரருக்கு ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாயும், கிரேட் ஏ வில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாயும் பி பிரிவில் உள்ள வீரருக்கு மூன்று கோடி ரூபாயும் சி பிரிவில் உள்ள வீரருக்கு ஒரு கோடி ரூபாயும் தரப்படும்.

டெஸ்ட் போட்டிக்கு ஊதியம்
ஆனால் இதைத் தவிர ஒவ்வொரு போட்டிக்கும் தனி சம்பளம் வழங்கப்படும். அதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடினால் அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் நான்கு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மொத்தமாக 60 லட்சம் ரூபாய் தனி சம்பளமாக கிடைக்கும்.
2016 ஆம் ஆண்டுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ஏழு லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டிருந்தது.

ஒருநாள், டி20 ஊதியம்
ஆனால் பிசிசிஐ இதனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் முன்பு 5 நாட்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தி விளையாடிய வீரர்களுக்கு ஏழு லட்சம் தான் கிடைத்தது. ஆனால் வீரர்கள் தற்போது மூன்று நாட்களில் முடிவடையும் போட்டிகளுக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுகிறார்கள். இதேபோன்று ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளமாக இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது. இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் விளையாடும் ஒரு இந்திய வீரருக்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். இது தவிர ஒவ்வொரு போட்டியிலும் சதம், அதிக விக்கெட் எடுக்கும் வீரர்களுக்கு தனி ஊக்கத் தொகை கிடைக்கும்.

டெஸ்ட்க்கு முக்கியத்துவம்
டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஒரு இந்திய வீரர் பத்து டெஸ்ட் போட்டியில் விளையாடி சம்பாதிக்கும் பணத்தை டி 20 யில் பெற வேண்டுமென்றால் அவர் 50 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு பிசிசிஐ சம்பளத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. எனினும் மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி அவ்வளவு நடைபெறவில்லை. கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 2021 ஆம் ஆண்டு தான் விளையாடியது.

கிரிக்கெட்டுக்கு அதிகம்
இந்த பணத்தை எல்லாம் தாண்டி ஐபிஎல் தொடரில் கோடி கோடியாக இந்திய வீரர்களுக்கு தனியாக கிடைக்கிறது. இதேபோன்று சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போடுவதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும் என தனி பணம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இந்தியாவில் இன்னும் கிரிக்கெட் அசைக்க முடியாத விளையாட்டாக இருக்கிறது. இதேபோன்று பல விளையாட்டுக்கும் ஊதியங்கள் உயர்த்தி வழங்கப்பட்டால் நம் நாட்டில் பல வீரர்கள் உருவாகுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











