கோவை: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் கடைசி ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவடைந்த நிலையில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது லீக் போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் அபராஜித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் இளம் வீரர் பிரதோஷ் பால் - ஜெகதீசன் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஜெகதீசன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய பிரதோஷ் பால் 55 பந்துகளில் 88 ரன்கள் விளாசி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக விளையாட 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டம் அபிஷேக் தன்வர் வந்தார். அந்த ஓவரில் 26 ரன்கள் விளாசப்பட்ட நிலையில், மொத்தமாக11 பந்துகளை வீசினார். 4 நோ - பால்களை வீசிய அவர், ஒரு ஒய்டையும் வீசி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சஞ்ச்ய் யாதவ் 12 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதன் மூலம் டிஎன்பிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.