டெல்லி: பாகிஸ்தான் சூப்பர் லீகில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், அந்த நாட்டின் முன்னணி வீரராகக் கருதப்படும் பாபர் அசாமை கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாகிஸ்தானையும், பாபர் அசாமையும் கேலி செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, அந்தத் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு குறித்து கிரிக்கெட் சார்ந்த பதிவுகளை வெளியிடும் சமூக வலைதள கணக்கு ஒன்று, புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விரைவாக அரை சதம் அடித்தது யார், மெதுவாக அரை சதம் அடித்தது யார் என்ற புள்ளிவிவரம் இடம்பெற்றிருந்தது. அதில், இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் 19 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்திருந்தது ஒருபுறமும், பாபர் அசாம் 47 பந்துகளில் மிகவும் நிதானமாக அரை சதம் அடித்திருந்தது மறுபுறமும் இடம்பெற்று இருந்தது. இந்தப் பதிவைத்தான் சாம் பில்லிங்ஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் நினைத்திருந்தால், 'சாம் பில்லிங்ஸ் 19 பந்துகளில் அரை சதம் அடித்தார்' என்று ஏதோ ஒரு பதிவை எடுத்துப் பகிர்ந்து இருக்க முடியும். ஆனால், பாபர் அசாம் நிதானமாக அரை சதம் அடித்தார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, இந்த புள்ளிவிவரம் இடம்பெற்று இருக்கும் பதிவை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் பதிவை வைத்து கேலி செய்து கொண்டாடி வருகிறார்கள்.
பலரும், 'பாகிஸ்தானுக்கே சென்று பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனை கேலி செய்திருக்கிறார் சாம் பில்லிங்ஸ்' என அவரைப் பாராட்டி வருகின்றனர். மற்றொருவரோ, 'பாபர் அசாம் 50 பந்துகளில் அரை சதம் அடிப்பதை மூன்று பந்துகளில் தவறவிட்டு இருக்கிறார்' எனக் கேலி செய்திருக்கிறார்.
தற்போது, பாதியில் நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர், மீண்டும் மே 17 அன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரும் மே 17 அன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.