மும்பை : நடப்பு சர்வதேச கிரிக்கெட்டில் எந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பிளேயிங் லெவன் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார். அதில் 7 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இம்முறை நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று எப்போதும் போல் வாயாலேயே வடை சுட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சஞ்சய் பங்கர் பெஸ்ட் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்து இருக்கிறார். இதில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆன ஸ்மித், பாட் கம்மின்ஸ், மார்னஸ் லாபஸ்சேன் போன்ற எந்த வீரர்களுக்கும் சஞ்சய் பங்கர் இடம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சஞ்சய் பங்கர் தேர்வு செய்த அணியை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக சஞ்சய் பங்கர் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரை தேர்வு செய்து இருக்கிறார். அவருக்கு துணையாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மாவை சஞ்சய் பங்கர் தேர்வு செய்திருக்கிறார். இடது கை,வலது கை என்ற காம்பினேஷனில் இந்த ஜோடி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இருவரும் அதிரடியாக விளையாட கூடிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது வீரராக கடந்த சில ஆண்டுகளாக அதிக சதம் அதிக ரன்கள் குவித்திருக்கும் ஜோ ரூட்டுக்கு சஞ்சய் பங்கர் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனை அவர் தேர்வு செய்திருக்கிறார்.
நான்காவது வீரராக இந்திய அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலியை சஞ்சய் பங்கர் தேர்வு செய்துள்ளார். இதேபோன்று ஐந்தாவது வீரராகவும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை சஞ்சய் பங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதேபோன்று ஆறாவது வீரராக அதிரடி ஆல் ரவுண்டரும் இங்கிலாந்தின் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ்க்கு சஞ்சய் பங்கர் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
ஏழாவது வீரராக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோன்று எட்டாவது வீரராக இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம் பிடித்திருக்கிறார். ஒன்பதாவது வீரராக ஆஸ்ட்ரேலியாவின் ஹேசல்வுட்டும், பத்தாவது வீரராக உலகின் முன்னணி வீரரான பும்ராவும் 11 ஆவது வீரராக முகமது சமீக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.