'வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வாலை சும்மா விடாதீங்க.. நல்லதில்லை'.. ஆவேசமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மும்பை: இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களத்தில் சண்டை போடுவது போன்ற மோசமான நடத்தையுடன் இருப்பதை கண்டித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஐசிசி மற்றும் பிசிசிஐ அமைப்புகளுக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அப்போது பெர்னாண்டோ ஆக்ரோஷமாகக் கொண்டாட, இதனால் ஆத்திரமடைந்த ஜெய்ஸ்வால் திரும்பி வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேருக்கு நேர் தலையால் முட்டிக்கொண்டார். சக வீரர்கள் இருவரையும் பிரித்து வைத்தனர். இந்தச் சம்பவத்திற்காக ஐசிசி இரு வீரர்களுக்கும் தலா 25 சதவீத அபராதம் விதித்தது. ஆனால், ஜெய்ஸ்வால் தடையிலிருந்து தப்பினார்.

இதேபோல், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இலங்கை ஏ அணி வீரருடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "அன்புள்ள ஐசிசி மற்றும் பிசிசிஐ... சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஜெய்ஸ்வால் என இவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கண்டிப்பதைத் தவிர்த்துச் சும்மா விட்டால், அவர்கள் மீண்டும் இந்தத் தவறுகளைச் செய்யவே பழகிக் கொள்வார்கள். இது கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போட்டிகளில் தவறு செய்யும் வீரர்களை உடனடியாகத் தற்காலிக நீக்கம் செய்யும் வகையில் பிசிசிஐ அண்மையில் தனது விதிகளை மாற்றியிருந்தது. இந்நிலையில், சர்வதேச போட்டிகளிலும் வீரர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்ய ஐசிசி மற்றும் பிசிசிஐ இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது விவாதப் பொருளாகவே நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications

