மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்ச்சைக்குரிய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், விராட் கோலி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் குறித்துத் தெரிவித்த கருத்து மீண்டும் சூடுபிடித்துள்ளது. "ஒருநாள் போட்டியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதுதான் உலகிலேயே மிகவும் எளிதான விஷயம்; அங்கு ரன் குவிப்பவர்களை நான் ஜாம்பவானாகக் கருதமாட்டேன்" என்று அவர் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் சதங்களை விளாசினர். இதைப் பார்த்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், விராட் கோலியை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

"ஜோ ரூட், ஸ்மித் போன்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் போராடி ரன் குவிக்கும்போது, விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு தனக்கு எளிதான ஒருநாள் போட்டிகளைத் தேர்வு செய்திருப்பது வேதனையளிக்கிறது. அவர் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது குறைகளைச் சரிசெய்து போராடியிருக்க வேண்டும்" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருந்தார்.
தற்போது தனது கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"பலரும் என்னிடம் ஏன் ஒருநாள் கிரிக்கெட் எளிதானது என்று கேட்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் புதிய பந்தை எதிர்கொள்ளப் பயந்து, மிடில் ஆர்டரில் 4, 5, 6-வது இடங்களில் களமிறங்கிய பலரை எனக்குத் தெரியும்."
"ஆனால், அவர்களே ஒருநாள் போட்டி என்று வந்தால் ஓப்பனிங் இறங்கத் துடிப்பார்கள். இது ஏன்? ஏனென்றால், ஒருநாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முயற்சிப்பதை விட, ரன்களைக் கட்டுப்படுத்தவே நினைப்பார்கள். ஸ்லிப், கல்லி திசைகளில் ஃபீல்டர்கள் இருக்க மாட்டார்கள். இது பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. செட்டில் ஆகிவிட்டால் யார் வேண்டுமானாலும் சதம் அடிக்கலாம்."
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் முதல் மூன்று இடங்களில் களமிறங்கி சதம் அடிப்பவர்களை நான் 'கிரிக்கெட் ஜாம்பவான்கள்' என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். எம்.எஸ். தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா போன்றவர்கள்தான் உண்மையான சாதனையாளர்கள்."
"ஏனெனில், 4, 5 மற்றும் 6-வது இடங்களில் களமிறங்கி, நெருக்கடியான நேரத்தில் பந்துவீச்சாளர்களைச் சமாளித்து அணியை வெற்றி பெற வைப்பதே கிரிக்கெட்டில் மிகவும் கடினமான காரியம். அதை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள்" என்று கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலியை, 'டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன் என்பதால் மஞ்ச்ரேக்கர் இவ்வாறு விமர்சிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்.