“என் வழி.. தனி வழி” பிசிசிஐ-ன் துரோகத்தையும் மீறி சஞ்சு சாம்சன் செய்த விஷயம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ துரோகம் செய்துள்ள நிலையில் தன் வழி தனி வழி என்பது போல அவர் செய்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி முடிவடைந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் வரும் மார்ச் 17ம் தேதி முதல் மும்பையில் தொடங்கி மார்ச் 22ம் தேதி சென்னையில் நிறைவு பெறும்.

50 ஓவர் தொடர்
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். 4வது டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற அவர், முதுகுவலி பிரச்சினை என பயிற்சியாளர்களிடம் கூறியுள்ளார். அவருக்கு ஸ்கேன் எடுத்த போது, பழைய காயமே இன்னும் முழுவதுமாக குணமடையாமல் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர்.

மீண்டும் ஏமாற்றம்
எனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு சரியான மாற்று வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஸ்ரேயாஸை போலவே ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் 66 ரன்கள் சராசரியை வைத்துள்ளார். எந்தவொரு ஆர்டரிலும் விளையாடக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் மாற்று வீரரை தேர்வு செய்யப்போவதில்லை என்றும், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரியவந்துள்ளது. வாய்ப்பு இருந்தும் பிசிசிஐ அவரை புறக்கணிப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சஞ்சுவின் முடிவு
இந்நிலையில் இதனை எதையுமே கண்டுக்கொள்ளாமல் சஞ்சு சாம்சன் தனி வழியில் சென்றுக்கொண்டுள்ளார். திடீரென சென்னைக்கு விசிட் அடித்துள்ள அவர், நேற்று நடிகர் ரஜினிகாந்த்-ஐ அவரது வீட்டிலேயே சந்தித்து ஆசி பெற்றார்.சஞ்சு சாம்சன் சிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ஐபிஎல் தொடரின் போது பல முறை நேர்க்காணலில் ரஜினி மீதான தனது பிணைப்பு குறித்து பேசியுள்ளார். எனவே தனது கடினமான சூழலிலும் அவரை சந்தித்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ரஜினியின் மரியாதை
சஞ்சு சாம்சனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு பரிசுகளையும் வழங்கி கவுரவப்படுத்தினார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களையும் சஞ்சு சாம்சன் சுற்றி பார்த்துக்கொண்டு ஜாலியாக வலம் வருகிறார். இந்த பயணத்திற்கு பிறகு அவர் நேரடியாக ஐபிஎல் பயிற்சிக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications