விமர்சகர்களுக்கு சாட்டையடி.. சஞ்சு சாம்சன் செய்த செயல்.. ஆப்கானிஸ்தானுக்கு மரண அடி.. மின்னல் அரைசதம்
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 21 பந்துகளில் தனது அதிவேக சர்வதேச டி20 அரைசதத்தை விளாசி விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அவரது அதிரடி ஆட்டம் மைதானத்தை அதிர வைத்தது.
முதல் போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாததால், அவருக்குப் பதிலாக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் களமிறக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த உச்சக்கட்ட அழுத்தத்திற்கு மத்தியில் 160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் நிதான துவக்கம் அளித்தார். முதல் 10 பந்துகள் நிதானம் காட்டிய அவர் அதன் பின் கியரை உயர்த்தி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ரஷித் கானின் சுழற்பந்தை லாவகமாக பவுண்டரிக்கு விரட்டி, வெறும் 21 பந்துகளில் தனது மின்னல் அரைசதத்தை எட்டினார். இதுவே சஞ்சு சாம்சனின் அதிவேக அரைசதம் ஆகும்.
ஒட்டுமொத்தமாக 22 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 பிரம்மாண்ட சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்து அசுர வேகம் காட்டினார். மறுமுனையில் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இந்த அதிரடி ஜோடி முதல் விக்கெட்டுக்கு வெறும் 6 ஓவர்களிலேயே 88 ரன்கள் குவித்து ஆட்டத்தை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. தனது துவக்க வீரர் இடத்திற்கு கடும் நெருக்கடி உருவான இக்கட்டான நேரத்தில், இந்த அதிரடி அரைசதத்தின் மூலம் இந்திய அணியில் தனது திறமையை சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications

