Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என் அன்பான பொண்டாட்டி”.. உலகக் கோப்பை தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி பதிவு!

அகமதாபாத்: இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றதில் மிக முக்கியப் பங்காற்றிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வேளையில், தனது இந்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த தனது மனைவி சாருலதாவுக்கு நன்றி தெரிவித்து சஞ்சு சாம்சன் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் பரவி வருகிறது.

மனைவியின் ஆதரவு

சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர்கள் காதலித்த காலத்தில் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றும், உலகக் கோப்பையை இருவரும் இணைந்து கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

Sanju Samson Shares Emotional Note to Wife Charulatha After Winning T20 World Cup 2026 Player of the Series

இந்தப் படங்களுடன் சஞ்சு சாம்சன் எழுதியுள்ள பதிவில், "நான் உன்னைச் சந்தித்த நாள் முதல் என் வாழ்வின் இந்த நாள் வரை, எனக்குத் துணையாக இருந்ததற்கு மிகவும் நன்றி. வெளிவுலகிற்கு நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், என்னை நானாகவே காதலித்து, என்னிடம் முற்றிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டாய். எனது சிறந்த தருணங்களையும், எனது மோசமான தருணங்களையும் நீ பார்த்திருக்கிறாய். எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணையாக நின்றாய்.

என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டு, அதை உனக்கானதாகவும் மாற்றிக்கொண்டதற்கு நன்றி. இந்தத் தருணத்திற்காக நான் எந்த அளவுக்கு ஆசைப்பட்டேனோ, அதே தீவிரத்துடனும் ஆர்வத்துடனும் நீயும் எனக்காகக் கனவு கண்டாய். மிக்க நன்றி என் அன்பான பொண்டாட்டி" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் நாயகன் சஞ்சு சாம்சன்

இந்த உலகக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பங்கு அளப்பரியது. அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 321 ரன்களைக் குவித்துள்ளார். சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா, சாவா போட்டியில் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.

கடைசியாக நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணிக்கு வெற்றி கட்டாயமாக இருந்த இந்த மூன்று முக்கிய போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

விராட் கோலியின் சாதனை முறியடிப்பு

இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் பல பேட்டிங் சாதனைகளையும் முறியடித்துள்ளார். அவர் மொத்தம் 321 ரன்களைக் குவித்து, ஒரே டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு, 2014 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆறு போட்டிகளில் விளையாடி 319 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.

மேலும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்த சஞ்சு சாம்சன், தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்.

Story first published: Tuesday, March 10, 2026, 7:48 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+