“எனக்கு இந்திய அணியில் இடமில்லையா?” சஞ்சு சாம்சன் செய்த செயல்.. அஜித் அகர்கருக்கு சொன்ன மெசேஜ்
திருவனந்தபுரம்: இந்திய டி20 அணியில் தனது இடம் குறித்து எழுந்த விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் தனது பேட் மூலம் அழுத்தமான பதிலை அளித்துள்ளார் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேரளாவில் நடந்த உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
சமீபகாலமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் இடம் உறுதியாக இல்லாத நிலையில், வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் அவர் நீக்கப்படலாம் என்று செய்திகள் பரவின. குறிப்பாக, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்த உத்தேச அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லாதது இந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியது. 2025 ஐபிஎல் தொடரில் காயம் மற்றும் ஃபார்ம் குறைபாடு காரணமாக 9 போட்டிகளில் 285 ரன்கள் மட்டுமே எடுத்ததும், அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், கிரீன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA) நடத்திய கண்காட்சி டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான KCA செயலாளர் லெவன் அணி, சச்சின் பேபி தலைமையிலான KCA தலைவர் லெவன் அணியை எதிர்கொண்டது.
இந்த பரபரப்பான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த KCA தலைவர் லெவன் அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கைத் துரத்திய KCA செயலாளர் லெவன் அணிக்கு, விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத் 29 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவருக்குப் பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதிரடியாகவும், நேர்த்தியாகவும் ஆடிய சஞ்சு சாம்சன் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அரைசதம், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதியில், பசில் தம்பி சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆசிய கோப்பைக்கான அணித் தேர்வு நடைபெற உள்ள முக்கிய தருணத்தில், சஞ்சு சாம்சன் அடித்துள்ள இந்த அரைசதம், "நான் ஃபார்மில் தான் இருக்கிறேன்" என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி ஆட்டம், அணியில் அவரது இடத்தைப் பற்றி எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications