வெறியாட்டம் ஆடிய சஞ்சு சாம்சன்.. விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி.. குறைந்த பந்தில் அரைசதம் விளாசி
ராஞ்சி: சஞ்சு சாம்சன் தன் மீது எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெறும் 21 பந்துகளில் மின்னல் வேக அரைசதம் விளாசி அசத்தினார். ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதை அடுத்து இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன், தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 9, 7, 2 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்களும் மட்டுமே எடுத்து சஞ்சு சாம்சன் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்தார்.

அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஆனால் தன் மீது தொடர்ந்து விமர்சனத்தை முன் வைத்தவர்களுக்கு பேட்டிங் மூலமாகவே சஞ்சு சாம்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன், வெறும் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதுவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதம் ஆகும். இவரது அதிரடியால் முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களைக் குவித்து மிரட்டியது.
தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து இருந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். அவர் 22 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்திய அணி விரைவாகவே 200 ரன்களை தாண்டியது. இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications

