"ஒழுங்கா ஆடாததற்கு நானே முழுப் பொறுப்பு.. யாரையும்..".. 82 ரன்கள் விளாசிய பின் சஞ்சு சாம்சன் பேச்சு
ராஞ்சி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து விமர்சகர்களின் வாயை அடைத்த சஞ்சு சாம்சன், இதற்கு முன் சில போட்டிகளில் மோசமாக ஆடியதற்கு தானே முழுப் பொறுப்பையும் ஏற்பதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21 பந்துகளில் அரைசதம் எட்டிய சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி வாணவேடிக்கை காட்டினார். கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அவரை நீக்கிவிட்டு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு சாம்சன் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு தனது ஆட்டம் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "இந்திய அணிக்காக விளையாடும் போது தீவிர பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகளைச் செய்வது மட்டுமே நமது கையில் உள்ளது. ஆனால் அதிவேக டி20 கிரிக்கெட்டில் முடிவுகள் எப்போதுமே நம் கையில் இருப்பதில்லை. முந்தைய 3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக, களத்தில் அதிக நேரம் எடுத்துக்கொண்டு சுயநலமாக மெதுவாக ஆட முடியாது.
அதிரடியான தொடக்கத்தை அணிக்கு பெற்றுத் தருவதே எனது கடமை. நான் ரன்கள் அடிக்காத போது அதற்கான பழியை என் மீதே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக வேறு யாரையும் அல்லது சூழ்நிலையையோ நான் குறை கூற மாட்டேன். களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் அணிக்காகச் சிறப்பாக ஆடவே முயற்சிக்கிறேன்" என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்தது 15 பந்துகளைச் சந்தித்த ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஞ்சி டி20 போட்டியில் இந்தியா அடித்த 249 ரன்களையும் கடந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதால், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் வீணாகப் போனது.


Click it and Unblock the Notifications

