CSK: சிஎஸ்கேவுக்கு தாவும் சஞ்சு சாம்சன்? மஞ்சள் கோட்டை தாண்டினார்.. ராஜஸ்தானை விட்டு விலகுவாரா?
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப்போவதாக வதந்திகள் எழத் தொடங்கி இருக்கின்றன. இதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு தான். அதில் இருக்கும் ஒரு மஞ்சள் நிறக் கோடு தான் இந்த வதந்தி பரவக் காரணம். அது என்ன என்று பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்துடன் சஞ்சு சாம்சனுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சில தகவல்கள் வெளியானது. ராகுல் டிராவிட் அப்படி எதுவும் இல்லை என மறுத்திருந்தாலும், சஞ்சு சாம்சன் அணி கூட்டங்களிலும், போட்டியின் முக்கிய தருணங்களிலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகப் பல சந்தர்ப்பங்களை ரசிகர்கள் வீடியோவாக வெளியிட்டு சுட்டிக்காட்டி வந்தனர்.

இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடர் முடிவடைந்து இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது தனது மனைவியுடன் சாலை ஒன்றைக் கடக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் சாலை ஓரத்தில் இருக்கும் மஞ்சள் நிறக் கோட்டை அவர் தாண்டுவது அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழே, "நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது" (Time to MOVE) எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இதை வைத்து சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதைத்தான் சூசகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் எனப் பலரும் கூறி வருகின்றனர். அந்த மஞ்சள் நிறக் கோடு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி 2026 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது. தோனி ஓய்வு பெற்று விட்டால், அடுத்து ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவரது இடத்தில் ஆடுவதற்கு தேவை. தற்போது ஊர்வில் பட்டேல் என்ற இளம் விக்கெட் கீப்பர் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால், அவர் அடுத்த ஆண்டு வரை நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்க வேண்டும். அதே சமயம் அவருக்குப் போதுமான அனுபவமும் இல்லை. இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சனின் இந்த பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியின் சூழ்நிலை மற்றும் சஞ்சு சாம்சனின் சூசகமான பதிவு ஆகியவற்றை வைத்து தான் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப்போவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications