IND vs ENG: மீண்டும் வேலையைக் காட்டிய சஞ்சு சாம்சன்.. உலகக் கோப்பையில் ஹீரோ.. இப்போது ஜீரோ
மும்பை: சமீபத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், மீண்டும் தனது பழைய சீரற்ற ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார். அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக டர்ஹாமில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் மிகவும் தடுமாறினார். அதிரடியாக விளையாட எந்த ஒரு முயற்சியும் செய்யாத அவர், 7 பந்துகளைச் சந்தித்து வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிரான தொடரிலும் முறையே 5 மற்றும் 0 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பியிருந்தார்.

சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பலவீனமே அவரது சீரற்ற பேட்டிங் தான். வெளிநாடுகளில் விளையாடிய தனது கடைசி 10 டி20 இன்னிங்ஸ்களில், 8 முறை ஒற்றை இலக்க ரன்களில் (0, 0, 107, 0, 0, 109*, 2, 5, 0, 1) ஆட்டமிழந்துள்ளார்.
மார்ச் 2026 டி20 உலகக் கோப்பை நாக்கவுட் போட்டிகளில் 97*, 89, 89 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம்சன், அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் 20 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்தது இல்லை என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஐபிஎல் 2026 தொடரிலும் 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடித்த போதிலும், அவரால் 500 ரன்களைக் கடக்க முடியவில்லை.
சாம்சனின் இந்தத் தொடர் தோல்விகளால், பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ள 15 வயது அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் சாம்சனுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால், இதே நிலை நீடித்தால் சாம்சன் தனது இடத்தை இழக்க நேரிடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

