இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கும் கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் முக்கிய இடத்தில் இருந்தாலும் ஒரு நாள் அணியில் அவர் அதிக அளவு சேர்க்கப்படுவதில்லை.
இந்த நிலையில் சையது முஸ்தாக் அலி தொடர் முடிந்தவுடன் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான ஆயத்த பயிற்சி முகாம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தான் கலந்து கொள்ள இயலாது என சஞ்சு சாம்சன் முறைப்படி கேரளா கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த கேரளா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், விஜய் ஹசாரே கோப்பை தொடரிலிருந்து சஞ்சு சாம்சனை அதிரடியாக நீக்கினர். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை என காரணம் காட்டி சஞ்சு சாம்சனையும் இந்திய அணியில் தேர்வு குழுவினர் சேர்க்கவில்லை. கேரளா கிரிக்கெட் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனை கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய விதம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், சஞ்சு சாம்னை தங்களது மாநிலத்திற்கு வந்து விளையாடுவதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் காய் நகர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், சஞ்சு சாம்சனிடம் பேசி இனி தங்களது அணிக்கு வந்து விளையாடுங்கள் என அழைப்பு விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதேபோன்று சாம்சன், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தான் விளையாடி வருகிறார். இதனால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் சஞ்சு சாம்சனை தொடர்பு கொண்டு கேரளாவுடன் உங்களுக்கு பிரச்சனை நீடித்தால் தங்களது அணிக்கு வந்து விளையாட கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் கேரளாவுக்கு மிக அருகில் தமிழ்நாடு இருப்பதால் சஞ்சு சாம்சன், இனி தமிழ்நாட்டுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கேரள வீரரான சந்தீப் வாரியர், தமிழ்நாடு மாநில சங்க நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்து விளையாடுகிறார்.இந்த பட்டியலில் சாம்சனும் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன், தமிழ்நாட்டு அணிக்கு வந்து விளையாடினால் அது மிகப் பெரிய பலத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
.