மதுபோதையில் வரம்பு மீறல்.. பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் புகார்.. சப்னா கில் தந்த ட்விஸ்ட்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா செல்ஃபி எடுக்க மறுத்ததால் தாக்குதலுக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்த சூழலில், அவர் மீதே தற்போது குற்றச்சாட்டுக்கள் திரும்பியுள்ளது.10 பிரிவுகளின் கீழ் புகார்கள் அடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா சமீபத்தில் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இன்ஸ்டாகிராம் பிரபலமான சப்னா கில்லும், ஷாவும் பேஸ் பால் மட்டையால் சண்டையிட்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் பிரித்வி ஷா அளித்த புகாரின் பேரில் சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதுகுறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகின்றன.

என்ன நடந்தது
கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று பிரித்வி ஷாவும், அவரது நண்பர்களும் பிரபல ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சப்னா கில்லும் அவரது நண்பர்களும் பிரித்வி ஷாவிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா எனக்கேட்டுள்ளனர். 2 புகைப்படங்களுக்கு பிறகு ஷா போதும் என நிறுத்திய போதும், அந்த கும்பல் விடாமல் தொந்தரவு செய்ததால் இறுதியில் கைகலப்பு ஆனதாக போலீஸாரின் ரெக்கார்ட் கூறுகிறது. மேலும் பிரித்வி ஷாவின் நண்பரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கைது நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து ஓஷிவாரா காவல் நிலையத்தில் பிரித்வி ஷா புகாரளித்ததை அடுத்து, சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 17ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 3 நாட்களாக நடந்த விசாரணையில் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியே வந்த சப்னா கில், பிரித்வி ஷா மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

என்னென்ன குற்றச்சாட்டு
மும்பை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சப்னா, தனது நண்பர் ஷோபிட் தாக்கூர் கிரிக்கெட் ரசிகர் என்பதால் பிரித்வி ஷாவிடம் செல்ஃபி கேட்க சென்றார். ஆனால் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த பிரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் தாக்கூரை துன்புறுத்தினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் பேசியும், தகாத முறையிலும் சீண்டிப்பார்த்தனர் என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

10 பிரிவுகளில் புகார்
ஆயுதங்கள் மூலம் தாக்கியது, உயிருக்கு ஆபத்தை விளைவித்தது என 10 பிரிவுகளின் கீழ் சப்னா கில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் இது குறித்து போலீசார் இன்னும் எந்தவித வழக்குப்பதிவும் செய்யவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திவிட்டு,முதற்கட்ட தகவலை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பிரித்வி ஷா மதுபோதையில் இருந்தது உறுதியானால், அவர் மீது வழக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications