Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இனி அவர் சர்ஃபராஸ் கான் எங்கே போவார்? இந்தியா ஏ அணியில் கூட இடம் இல்லை".. கொதித்த அஸ்வின்

சென்னை: தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் இருந்து மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கடும் அதிருப்தியையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு, சர்ஃபராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்புவதற்கான கதவுகளைக் கிட்டத்தட்ட மூடிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தியா 'ஏ' அணியில் சர்ஃபராஸ் கானின் பெயர் இடம்பெறாதது, சமூக வலைதளங்களில் தேர்வாளர்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், சர்ஃபராஸ் கான் எதிர்கொண்டுள்ள கடுமையான சூழ்நிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ஃபராஸ் கானின் பயணம்:

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், தனது முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 371 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சதம் ஒன்றையும் பதிவு செய்தார்.

அதன்பிறகு, தனது உடற்தகுதியை மேம்படுத்தும் நோக்கில் 17 கிலோ வரை எடையைக் குறைத்து, உள்ளூர் தொடரான புச்சி பாபு கோப்பையில் தொடர்ச்சியாகச் சதங்கள் அடித்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார் சர்ஃபராஸ் கான். ஆனால், தற்போது முழு உடற்தகுதியுடன் இருந்தும், தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

Sarfaraz Khan Exclusion Is the Door Shut Ashwin Expresses Anguish Over BCCI s Confusing Decision

பிசிசிஐயின் குழப்பமான கொள்கை - அஸ்வின் சாடல்:

தேர்வுக்குழுவின் இந்த முடிவில் "தெளிவற்ற தகவல் பரிமாற்றம்" மற்றும் "குழப்பம்" நிறைந்துள்ளதாக அஸ்வின் கடுமையாகச் சாடியுள்ளார். "தேர்வும், அதுகுறித்த தகவல் பரிமாற்றமும் சரியாக இருக்க வேண்டும். முன்பு, சுப்பிரமணியம் பத்ரிநாத், மனோஜ் திவாரி போன்ற வீரர்கள் நீண்டகாலம் இந்தியா 'ஏ' அணிக்குக் கேப்டனாக இருந்தும், இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை."

"அப்போது அவர்களிடம், 'உங்களுடைய ஆட்டத்தை நாங்கள் போதுமான அளவு பார்த்துவிட்டோம், இனி புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம். அதனால் நீங்கள் இந்தியா 'ஏ' அணியில் விளையாட மாட்டீர்கள். ஆனால், தேவைப்பட்டால் இந்திய அணிக்கு நேரடியாகத் தேர்வு செய்வோம்' என்று தெளிவாகக் கூறப்பட்டது" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.

"ஆனால், தற்போதைய இந்தியா 'ஏ' அணியைப் பார்த்தால் குழப்பமாக உள்ளது. 'சர்ஃபராஸின் ஆட்டத்தை நாங்கள் போதுமான அளவு பார்த்துவிட்டோம்' என்று கூறிவிட்டு, அவரை இந்திய அணிக்குத் தேவைப்படும்போது மட்டும் எடுப்போம் என்பது தவறானது. ஏனெனில், இதே அணியில் அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரும் நீண்ட காலமாக இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்கள்" என்று அஸ்வின் தேர்வுக்குழுவின் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டினார்.

"இனி அவர் எங்கே சென்று தன்னை நிரூபிப்பார்?":

சர்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டது தனக்கு மிகுந்த வேதனையையும், குழப்பத்தையும் அளிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். "சர்ஃபராஸின் புறக்கணிப்பை நான் ஆராயும்போது, எனக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஒருவேளை நான் தேர்வாளராக இருந்திருந்தால், அவரை அழைத்து என்ன சொல்லியிருப்பேன்?"

"சர்ஃபராஸ் கான் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார், ரன்களைக் குவித்து வருகிறார், தனது கடைசி டெஸ்ட் தொடரில் சதம் அடித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு புறக்கணிப்பைப் பார்க்கும்போது, 'நாங்கள் இவரைப் போதுமான அளவு பார்த்துவிட்டோம், இனி இவர் வேண்டாம்' என்று யாரோ நினைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்றார் அஸ்வின்.

சர்ஃபராஸ் கான் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையை விளக்கிய அஸ்வின், "அவர் இந்தியா 'ஏ' அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட கதவுகள் மூடப்பட்டது போலத்தான். இனி அவர் எங்கே சென்று தனது திறமையை நிரூபிப்பார்? இப்போது அவர் உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், 'அவர் முதல் தரப் போட்டிகளுக்கு மட்டுமே சிறந்த வீரர்' என்று கூறிவிடுவார்கள்."

"அப்படியென்றால், சர்ஃபராஸ் கான் தன்னை மேம்படுத்திக் கொண்டதை எங்கே சென்று காட்டுவார்? இந்த புறக்கணிப்பு, அணி நிர்வாகம் அல்லது தேர்வுக்குழு தரப்பிலிருந்து, 'நாங்கள் இனி சர்ஃபராஸ் கானை பரிசீலிக்கவில்லை' என்று எடுக்கப்பட்ட ஒரு முடிவு போலத் தெரிகிறது," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அஸ்வின்.

Story first published: Wednesday, October 22, 2025, 19:43 [IST]
Other articles published on Oct 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+