“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க”.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி.. சர்ஃபராஸ் கான் மனவேதனை!
மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் தேர்வுக்குழு தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியுடனான டி20 தொடரை 2 - 1 என்றும், ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றிகரமாக முடித்தது. இதனையடுத்து அடுத்த தொடருக்கான பணிகள் தொடங்கிவிட்டன.
இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவிருக்கிறது.

இந்திய அணி அறிவிப்பு
இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த தொடரில் வெற்றி பெற்றே தீர வேண்டும். குறைந்தபட்சம் சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

கிளம்பிய சர்ச்சை
இப்படிபட்ட முக்கியமான தொடருக்கான அணி தேர்வுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிரடி வீரர்கள் இஷான் கிஷான், சூர்யகுமார் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அடித்தளமாக உள்ள ரஞ்சிக்கோப்பையில் கலக்கி வரும் சர்ஃப்ராஸ் கான் ஒதுக்கப்பட்டுள்ளார்.

அட்டகாசமான சராசரி
ரஞ்சிக்கோப்பையில் கடந்த 3 சீசன்களாக அவரை எந்தவொரு பவுலராலும் எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 3 சீசனங்களில் 928 ரன்கள், 982 ரன்கள், 801 ரன்கள் என ரன் வேட்டை நடத்தி இருக்கிறார். அவரின் சராசரி 80.47 ஆக உள்ளது. சர்வதேச அளவில் இது கவனம் பெற வைத்த ஒன்றாகும். இதனால் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.

மனவேதனை
இந்நிலையில் இதுகுறித்து அவர் மனவேதனை அடைந்துள்ளார். அதில் இந்திய அணி அறிவிப்பின் போது, அதில் என் பெயர் இடம்பெறாததை பார்த்து நான் ஏமாற்றமடைந்தேன்.
நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. கவுகாத்தியிலிருந்து டெல்லிக்கு பயணிக்கும் போது ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ன நடக்கிறது என்பதை நினைத்து தனிமையாக உணர்ந்து அழுதேன்"

உறுதி கொடுத்தனர்
ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த பின் நான் தேர்வு குழுவினரை சந்தித்தேன். அப்போது வங்கதேச தொடரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதற்காக தயாராக இருக்குமாறும் அவர்கள் என்னிடம் உறுதியளித்தனர். சமீபத்தில் நான் சேட்டன் சர்மாவையும் சந்தித்தேன். அவரும் விரைவில் வாய்ப்பு வரும் எனக்கூறியிருந்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என சர்ஃபராஸ் கான் வேதனையுடன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications