சர்ஃபராஸ் கான் விசயத்தில் பிசிசிஐ தவறு செய்து விட்டதா? அந்த பையனுக்கு கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்
மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக சர்ஃபராஸ் கான், விலகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புச்சி பாபு தொடரில் பங்கேற்ற சர்ஃபராஸ், தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசி கம்பேக்கை கொடுத்திருந்தார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள BCCI சிறப்பு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
27 வயதான சர்பிராஸ், செப்டம்பர் 4 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள BCCI சிறப்பு மைய மைதானம் B-யில் மத்திய மண்டலத்திற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மேற்கு மண்டல அணிக்காக விளையாட தயாராக இருந்தார். இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு ரன்களை சேர்த்திருந்தால், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளூர் சீசனுக்கு திரும்ப குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் தேவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் மும்பையின் ரஞ்சி டிராஃபி பயணத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர்"சர்ஃபராஸ் குவாட்ரைசெப்ஸ் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், இது புச்சி பாபு நிகழ்வில் ஹரியானாவுக்கு எதிராக சதம் அடிக்கும் போது ஐந்து நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. அவர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு விளையாட முடியாது. தற்போது பிசிசிஐ சிறப்பு மையத்தில் பயிற்சியில் உள்ளார்," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சர்ஃபராஸுக்கு பதிலாக பரோடாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஷிவாலிக் ஷர்மா இடம்பெற வாய்ப்புள்ளது. மேற்கு மண்டல அணியின் மாற்று வீரர்களில் ஷிவாலிக் பெயரிடப்பட்டிருந்தார். ஷிவாலிக் 18 முதல் தர போட்டிகளில் 1,087 ரன்கள் குவித்து 43.48 சராசரியை பதிவு செய்துள்ளார். இதில் மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். கடந்த சீசனில் ஏழு போட்டிகளில் 484 ரன்கள் எடுத்து 44 சராசரியை பதிவு செய்தார்.
சர்ஃபராஸ் சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக இந்தியா A அணிக்காக 92 ரன்கள் எடுத்திருந்த போதிலும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் கிடைக்கவில்லை. புச்சி பாபு தொடரில் அவர் சிறப்பான ஃபார்மில் இருந்தார். தற்போது, இந்த காயம் காரணமாக விலகி இருப்பதால், அவருடைய ரசிகர்களும் விரக்தியில் உள்ளனர். இதனால், இந்த பையனுக்கு கொஞ்சமாச்சும் நல்லது நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதே போன்று, சர்பராஸ் கான் உடல் எடையை குறைத்த பிறகும், அவருக்கு ஏன் காயம் ஏற்பட்டது. இதனால், அவருடைய உடல் எடை குறைக்கும் விதத்தில் ஏதேனும் பிரச்சினையா என்றும் ரசிகர்கள் சந்தேகத்தை தெரிவித்துள்ளனர். இதனால், சர்பராஸ் கான் உடல் எடையை குறைக்க சொல்லி பிசிசிஐ தவறு செய்துவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications