Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து மவுனத்தை கலைத்த சர்பராஸ் கான்.. தோனி குறித்து பேச்சு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான், நவம்பர் 2024-க்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் களம் கண்ட அவர், 11 இன்னிங்ஸ்களில் 371 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டில் இந்திய அணித் தேர்வில் தாம் புறக்கணிக்கப்படுவது குறித்து முதல் முறையாக சர்பராஸ் கான் மனம் திறந்துள்ளார்.

2024 பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார் சர்பராஸ். தனது அறிமுகப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 62 மற்றும் 68* ரன்கள் அடித்து அரைசதங்கள் விளாசினார். இந்த சிறப்பான துவக்கத்தின் மூலம், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார்.

அதே ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வங்கதேசத்துக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தும், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் அணிக்குத் திரும்பியதால் அவருக்கு விளையாடும் வாய்ப்பு அமையவில்லை. எனினும், 2024 அக்டோபர் 16 அன்று பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட காயம், சர்பராஸுக்கு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் பொன்னான வாய்ப்பை அளித்தது.

கில்லுக்குப் பதிலாக இந்திய அணியில் களமிறங்கிய அவர், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்கள் குவித்து அசத்தினார். விராட் கோலியுடன் (70 ரன்கள்) மூன்றாவது விக்கெட்டுக்கு 136 ரன்களையும், ரிஷப் பண்டுடன் (99 ரன்கள்) நான்காவது விக்கெட்டுக்கு 177 ரன்களையும் சேர்த்து அணியை வலுப்படுத்தினார். சர்பராஸ் கான் அடித்த இந்த சதம், அந்தப் போட்டியில் இந்தியாவை வெற்றிபெற வைக்காவிட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவரது இடத்தை உறுதி செய்தது.

ஆனால், அந்தத் தொடரில் அவரது பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை, வெறும் 11, 9, 0 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்ட போதிலும், ஐந்து போட்டிகளில் ஒன்றிலும்கூட பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அந்தத் தொடருக்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் நிகழ்காலத்தில் வாழவே முயற்சிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் என்னால் எதுவும் செய்ய முடியாது. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதையும் நான் அறியேன். எனக்குத் தெரிந்தது என்னவென்றால்,நான் வீட்டிற்குப் போய் வலைப்பயிற்சி செய்வேன், என் தந்தையுடன் நேரம் செலவு செய்வேன். ஹோட்டலில் உறங்கிவிட்டு, மீண்டும் அடுத்த நாளைக்கான போட்டியில் விளையாடுவேன்."

"எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை. பல ஆண்டுகளாக நான் என்ன செய்து வருகிறேனோ, அதையே தொடர்ந்து செய்வேன்," என்று சர்பராஸ் கான் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, சர்பராஸ் கான் பேட்டிங்கில் தீப்பொறி பறக்க விடுகிறார். முதலில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்திய அவர், பின்னர் விஜய் ஹசாரே டிராபியிலும் பல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸ்களை விளையாடினார். அண்மையில் ஹைதராபாத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் இரட்டை சதம் அடித்து, இன்னிங்ஸ் வெற்றியையும், காலிறுதிப் போட்டிக்கு முன்னேறவும் மும்பை அணிக்கு உதவினார்.

"நான் எனது வெள்ளைப்பந்து ஆட்டத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். இந்தியாவிற்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன், அதன் மீதுதான் எனது முழு கவனமும் உள்ளது," என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய சர்பராஸ் கான், 2025 டிசம்பர் 16 அன்று நடைபெற்ற ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ₹75 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார்.

சிஎஸ்கே அணியால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய சர்பராஸ், "இந்தத் தலைமுறையின் ஜாம்பவான்களுடன் விளையாடுவது என் கனவாக இருந்தது. நான் ஆர்சிபி அணியில் விராட் பாயுடன் இணைந்து விளையாடினேன். ரோஹித் பாயுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை, ஆனால் டெஸ்ட் அணியில் அது நிறைவேறியது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி பாய் ஓய்வு பெற்ற பிறகு, அவருடன் விளையாட வாய்ப்பில்லை என்றே கருதினேன்.ஆனால் ஐபிஎல் ஏலத்தில் ஆரம்பத்தில் எனக்கு எந்த அணியும் கிடைக்காத நிலையில், சிஎஸ்கே என்னைத் தேர்ந்தெடுத்தது. நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்," என்று சர்பராஸ் கான் கூறினார்.

Story first published: Wednesday, January 28, 2026, 18:21 [IST]
Other articles published on Jan 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+