மும்பை : ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒரு வீரர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு தகுதி வழிமுறையும் பின்பற்றப்படவில்லை. உடல் பருமன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் களத்தில் சாதித்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது கிரிக்கெட் களம் மாறி வருகிறது. உடல் தகுதி இருந்தால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அண்டர் 19 கிரிக்கெட்டில் சாதித்து ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் சதம் சதமாக அடித்த சப்ராஸ்கானுக்கு இந்த ஆண்டுதான் விடிவுகாலம் கிடைத்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணிக்காக அறிமுகமான சர்பராஸ் கான் அறிமுக போட்டியில் 62 ரன்கள் எடுத்தார். இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களும் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்களும் சர்பராஸ் கான் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் இதில் பெரிய பங்கை சர்பராஸ் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்பராஸ் கான் உடல் பருமனாக இருப்பதாக அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் தனது உடல் எடையை குறைக்க சர்பராஸ் கான் கடும் முயற்சியின் ஈடுபட்டு வருகிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் கூட சர்பராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் ஆறு மாதம் காலம் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். எனினும் தனது உடல் எடை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். எழுந்தவுடன் ஓடி பயிற்சி மேற்கொள்வேன். தொடர்ந்து ஓடுவதன் மூலம் என்னுடைய உடல் தகுதி அதிகரிக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது என்று சர்பராஸ் கான் கூறியுள்ளார்.
ஓடி முடித்த பிறகு தான் ஜிம்மில் இணைந்து பல்வேறு பயிற்சிகளை செய்வதாகவும், பேட்டிங் வலை பயிற்சியை மாலை நேரத்தில் வைத்துக் கொள்வதாகவும் சர்பராஸ்கான் கூறியிருக்கிறார்.