இந்திய அணியை வீழ்த்திய முன்னாள் கேப்டன் சர்பராஸ்-ஐ பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக நியமிக்க திட்டம்
லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் படுமோசமாக ஆடி வெளியேறிய பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐந்து மாதங்களாக காலியாக உள்ள இந்தப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், வருகிற மே மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது புதிய பொறுப்பை ஏற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியின் வழிகாட்டியாக சர்ஃபராஸ் அகமது செயல்பட்டார்.

இந்திய அணிக்கு எதிரான வெற்றிகள்
அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியிலும் இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது.
இப்படி இந்திய அணிக்கு எதிராகச் சிறப்பான வியூகங்களை அமைத்து வெற்றி பெற்ற அனுபவம் அவருக்கு உள்ளது. சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றியின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் ரசிகர்கள் பலரும் சர்ஃபராஸ் அகமதை தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது அவரது நியமனத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
காலியான பதவி
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கடந்த ஐந்து மாதங்களாக காலியாகவே உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, இடைக்காலப் பயிற்சியாளராக அசார் முகமது செயல்பட்டார். தற்போது சர்ஃபராஸ் அகமது ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியுடன் பணியாற்றி வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் அடுத்தகட்டப் பயணமாக, வருகிற மே மாதம் எட்டாம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மூலம் சர்ஃபராஸ் அகமது தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ஃபராஸ் அகமதுவின் கிரிக்கெட் பயணம்
பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் அகமது, 3031 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அடங்கும். 13 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டு 4 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக 2018 ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 117 போட்டிகளில் விளையாடி 2315 ரன்களையும், 61 டி20 போட்டிகளில் விளையாடி 818 ரன்களையும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் கேப்டனாக அவரது வெற்றி சதவீதம் 78.37 ஆக உள்ளது.
இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் 9 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறத் தவறியது குறிப்பிடத்தக்கது. சிறந்த கேப்டன்சி அனுபவம் உள்ளதால், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக அவர் சிறப்பான முறையில் செயல்படுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.


Click it and Unblock the Notifications