இந்திய-இலங்கை கிரிக்கெட்: விசாகப்பட்டிணம் ஒரு நாள் போட்டி ரத்து?
ஹைதராபாத்: இந்தியா-இலங்கை இடையே விசாகப்பட்டிணத்தில் நடக்கவிருந்த ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது. போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.
தனி மாநிலம் கோரி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினரும், ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று ராயலசீமா, ஆந்திர கடலோர பகுதிகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆந்திராவில் பெரும் கலவரம் நடந்து வருகிறது.
இதனால் வரும் 18ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது.
இந்தப் போட்டிக்காக இன்று முதல் நடப்பதாக இருந்த டிக்கெட் விற்பனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டிணம் போட்டியை ரத்து செய்துவிட்டு அதை வேறு இடத்தில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று விசாகப்பட்டிணம் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications