3 நாட்களில் அஸ்வின் செய்த ட்ரிக்.. கதிகலங்கிய ஆஸ்திரேலியா.. இன்னும் இருக்கு.. வெளியான ரகசியம்
ராஜ்கோட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தன் பந்துவீச்சால் அந்த அணியை திணற வைத்து இருக்கிறார்.
அவரது பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் வீசுவது போல இல்லை. நிறைய மாற்றங்களை செய்துள்ளார். அதனால் தான் ஆஸ்திரேலிய அணி வீரர்களால் அவரது பந்தை கணிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அந்த ரகசியத்தை குறித்து அவரே பேசி இருக்கிறார்.

அந்த அதிசயம் : முன்னதாக இந்திய ஒருநாள் அணியில் அஸ்வின் இடம் பெற்ற பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் முதல் 6 ஓவர்கள் கொஞ்சம் திணறினார். ஆனால், அடுத்த நான்கு ஓவர்கள் அதிசயம் நடந்தது போல மிகக் குறைந்த ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
விக்கெட் வேட்டை : இரண்டாவது ஒருநாள் போட்டி தட்டையான இந்தூர் ஆடுகளத்தில் நடந்தது. அங்கே சுழற்பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடாது. அதற்கேற்ப ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா, இந்தியாவின் ஜடேஜா ஆகியோர் அதிக ரன்களை கொடுத்த நிலையில், அஸ்வின் அவர்களை விட கட்டுக் கோப்பாக பந்து வீசினார். அவரது பந்துகள் அதிகமாக சுழன்றன. ஆஸ்திரேலிய வீரர்களால் அவரை கணித்து ஆட முடியவில்லை. அந்தப் போட்டியில் அவர் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
அந்த ரகசியம் : இது குறித்து இரண்டாவது போட்டி முடிந்த உடன் பேசினார் அஸ்வின். அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய விஷயங்களை பார்ப்போம். அவர் தனது கேரம் பால் மற்றும் ஆஃப் பிரேக்கில் மாற்றம் செய்து இருக்கிறார். மூன்றாவது விரலை பயன்படுத்தி பந்து வீசுகிறார். அது தான் அவரது பந்துவீச்சில் பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. இதற்காக அவர் மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். அது பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.
சிறப்பு பயிற்சி : அது மட்டுமின்றி தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சாய்ராஜ் பஹுதுலே (பிசிசிஐ சிறப்பு பயிற்சியாளர்) உடன் மூன்று - நான்கு நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு, வெவ்வேறு கோணங்கள் மற்றும் பந்தை பிடிக்கும் முறைகளை மாற்றி பயிற்சி செய்து பார்த்ததாக குறிப்பிட்டார் அஸ்வின். இதை தான் எப்போதோ செய்து இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த பயிற்சி தான் அஸ்வின் பந்துவீச்சு மாறியதன் ரகசியம்.
அணியில் இடம்? : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் நிச்சயம் இடம் பிடிப்பார் என கூறப்படும் நிலையில், அவர் விக்கெட்களை வீழ்த்தி இருப்பதோடு தன் அனுபவத்தை காட்டும் வகையில் புதிய பந்துவீச்சு முறைகளையும் கையாளத் துவங்கி இருக்கிறார். இது அவருக்கு அணியில் இடத்தை பெற்றுத் தருமா? என பார்ப்போம்.


Click it and Unblock the Notifications