நாக்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 'பாலோ ஆன்' வாங்கியது இந்தியா.
2வது இன்னிங்ஸிலும் ரன் குவிக்க அது தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் சோபிக்காத சச்சின் டெண்டுல்கரும், முரளி விஜய் கிருஷ்ணாவும் நிலையாக ஆடி வருகின்றனர்.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 25 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் சடசடவென மூன்று முக்கிய விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தவிப்புக்குள்ளானது.
கம்பீர், 12 ரன்களிலும், சச்சின் 7 ரன்களிலும், முரளி கிருஷ்ணா 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.
இந்த நிலையில் ஷேவாக்கும், பத்ரிநாத்தும் பொறுப்புடன் ஆடத் தொடங்கினர். வழக்கைத்தை விட சற்று நிதானமுடன் ஆடிய வீரேந்திர ஷேவாக் அபாரமான சதம் போட்டார்.
139 பந்துகளைச் சந்தித்த அவர் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறு முனையில் பத்ரிநாத் நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். இருப்பினும் 56 ரன்களில் அவுட் ஆகி விட்டார் பத்ரி. இது அவரது முதல் டெஸ்ட் அரை சதமாகும்.
இந்த நிலையில் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டெயினின் புயலில் சிக்கி இந்திய வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தனர்.
டோணி 6 ரன்களில் வீழ்ந்தார். சாஹா (0), ஹர்பஜன் (8), ஜாகிர் கான் (2), அமீத் மிஸ்ரா (0) ஆகியோரை ஸ்டெயின் அவுட் ஆக்கினார்.
ஸ்டெயினின் அபாரப் பந்து வீச்சுக்கு மொத்தம் 7 விக்கெட்கள் விழுந்தன. இதையடுத்து 233 ரன்களில் சுருண்டு போனது இந்தியா.
இதையடுத்து இந்தியாவை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடுமாறு பணித்தது தென் ஆப்பிரிக்கா.
இதையடுத்து ஷேவாக்கும், கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால், ஷேவாக் 16 ரன்களும், கம்பீர் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மீண்டும் இந்தியா தடுமாற்றத்தைக் கண்டது.
இன்றைய ஆட்ட நேர இறுதியில் சச்சின் 15 ரன்களுடனும், முரளி கிருஷ்ணா 27 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.