"என் இரத்தம் கொதிக்கும்".. பாகிஸ்தானுக்கு மொத்தமா திருப்பிக் கொடுத்தேன் - சேவாக் ஆவேசம்
மும்பை: வீரேந்திர சேவாக் போன்று "அடிச்சிட்டு தான் பேசுவேன்" மோடில் விளையாடும் எண்ணிக்கை கிரிக்கெட்டில் மிகக் குறைவு. ஆனால், அவர் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, பாகிஸ்தான் வீரர்கள் என்னவெல்லாம் டார்ச்சர் செய்தார்கள் என்பதை அவர் சொல்ல கேட்போம்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு சேவாக் போன்ற வீரர் கிடைத்தது வரப்பிரசாதம் எனலாம். தொடக்க வீரராக களமிறங்கி, எதிரணி பவுலர்களை முதல் பந்தில் இருந்தே அடித்து வெளுப்பது இவரது ஸ்டைல்.
அதுவும் சச்சினுடன் களமிறங்கி இவர் ஓப்பனிங் விளையாடிய போது, யார் சச்சின், யார் சேவாக் என்பதை சச்சினின் மனைவியாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி இருவரும் ஒரே ஸ்டைலில் விளையாடி அசத்தியதை ரசிகர்கள் மறக்க முடியுமா என்ன?

பாகிஸ்தானுக்கு எதிராக
2001ல் பெங்களூருவில் நடந்த ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியில் வீரேந்திர சேவாக் அறிமுகமானார் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த போட்டியில் அவர் 58 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர்களுக்கு தெரியாது சேவாக், 1999 ஆம் ஆண்டு மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு அறிமுகமானார் என்று. ஆம்! சேவாக் 99லேயே பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். அந்த போட்டியில், ஷாஹித் அப்ரிடி, ஷோயிப் அக்தர், முகமது யூசுப் உட்பட பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் அவரை எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பதை சேவாக் தெரிவித்துள்ளார். அந்த போட்டியின் போது, சேவாக்கின் வயது 21.

வசைச் சொற்கள்
இதுகுறித்து சேவாக் கூறுகையில், "அப்போது எனக்கு 20-21 வயதுதான். நான் பேட்டிங் செய்யச் சென்றபோது, ஷாஹித் அப்ரிடி, ஷோயிப் அக்தர், முகமது யூசுப் என அனைத்து பாகிஸ்தான் அணி வீரர்களும் என்னை மிகவும் ஸ்லெட்ஜிங் செய்து வரவேற்றனர். எனக்கு கொஞ்சம் பஞ்சாபி தெரியும். அதனால் என் மீது வீசப்பட்ட வசைச் சொற்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் என்னால் பதிலுக்கும் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அது தான் எனது முதல் போட்டி. எனவே நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். 25000 பேர் போட்டியை பார்க்க வந்திருந்தனர். இவ்வளவு பேர் முன்னால் விளையாடுவதை நான் கற்பனை செய்ததில்லை. அதனால் அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பின்னர் நான் ஒரு முழு வீரராக உருவெடுத்த போது, நான் அதை அவர்களுக்கு திருப்பி கொடுத்தேன்.

இரத்தம் கொதிக்கும்
"நாங்கள் 2004 ஆண்டு பாகிஸ்தான் சென்றபோது, முல்தானில் முச்சதம் அடித்ததன் மூலம், நான் அவர்களின் அனைத்து வசைச் சொற்களுக்கும் திருப்பி பதிலடி கொடுத்தேன். நான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், தானாகவே என் இரத்தம் கொதிக்கத் தொடங்கிவிடும், அதனால் நான் அவர்களுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக செயல்பட்டேன்" என்று சேவாக் மேலும் கூறினார்.

மோசமான அனுபவம்
சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக மிரட்டலான சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். டெஸ்டில் நான்கு சதங்களுடன் 1276 ரன்கள் எடுத்துள்ளார். ஆவரேஜ் 91.14. ஒருநாள் போட்டிகளில், சேவாக் 31 போட்டிகளில் 34.5 ஆவரேஜ் வைத்திருக்கிறார். இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்களுடன் 1071 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் பந்துவீச்சை அவர் எப்போதுமே விரும்பியதற்கான காரணம், சேவாக் தனது அறிமுகத்தில் அவர்களுக்கு எதிரான மோசமான அனுபவத்தினால் தான்.


Click it and Unblock the Notifications