டெல்லி: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. அந்த போட்டியில் இந்தியா அசத்தலாக விளையாடி பாகிஸ்தானை 5க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்காக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
மன்னிக்கவும் சோயப் பாய், ஹாக்கியிலும் மோக்காவை தவறவிட்டுவிட்டீர்கள் #IndBeatsPak என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது வர்ணனை செய்வதில் சேவாக் மற்றும் அக்தரிடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.