ஐபிஎல் காப்பாற்றப்பட்டுள்ளது... கிறிஸ் கெயிலை நிராகரித்தவர்களுக்கு சேவாக் பதிலடி
Recommended Video

மொகாலி: டி-20 கிரிக்கெட்டில் உலக நாயகனான, கிறிஸ் கெயிலை தேர்வு செய்ததன் மூலம், ஐபிஎல்லை காப்பாற்றியுள்ளேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரான முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து, சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதுவரை ஐபிஎல்லில், 2008 முதல் 2010 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், 2011 முதல் கடந்த ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் கெயில் விளையாடினார்.
இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தின் போது, இரண்டு சுற்றுகள் வரை அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 38 வயதாகிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சரியாக விளையாடவில்லை என்பதால், அவரை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.
கடைசியில் ரூ.2 கோடிக்கு அவரை பஞ்சாப் அணிக்காக, அந்த அணியின் ஆலோசகரான வீரேந்திர சேவாக் ஏலம் எடுத்தார். இந்த சீசனில் முதல் இரண்டு ஆட்டங்களில் கெயில் களமிறக்கப்படவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். நேற்று நடந்த ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து, சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி-20 போட்டிகளில் கண்டிப்பாக கிறிஸ் கெயில் இருப்பார். டி-20 ஸ்பெஷலிஸ்டான கிறிஸ் கெயிலின் அதிரடி சதம் குறித்து, ஐபிஎல் காப்பாற்றப்பட்டுள்ளது என்று வீரேந்திர சேவாக் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஆட்டத்தின் முடிவில் பேசிய கெயில், என்னை தேர்வு செய்ததன் மூலம் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார். கெயிலை ஏலத்தின்போது நிராகரித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேவாக் டுவிட் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications