அவரை ஓரம்கட்டியது பெரும் தவறு.. ஆசிய கோப்பையில் இந்தியாவின் சொதப்பல்.. சேவாக் கடும் விளாசல்!
மும்பை: இந்திய அணியில் முக்கிய வீரர் ஒருவர் ஓரம்கட்டப்பட்டதற்காக பிசிசிஐ மீது சேவாக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக சொதப்பி வெளியேறியது.
லீக் சுற்றில் 2 வெற்றிகளை பெற்ற சூழலில் சூப்பர் 4 சுற்றில் 2 தோல்விகளை சந்தித்து தொடரில் இருந்தே வெளியேறியது.

இந்திய அணி சொதப்பல்
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் சிறப்பாக செயல்பட்ட போது, பந்துவீச்சு தான் தோல்விகளுக்கு காரணமாக இருந்தது. ஏனென்றால் வேகப்பந்துவீச்சில் சீனியர் புவனேஷ்வர் குமார் மற்றும் அனுபவமே இல்லாத ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை மட்டுமே நம்பி இந்திய அணி சென்றது. பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இல்லாததால் இந்த முடிவை எடுத்தனர்.

சேவாக் சாடல்
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவு குறித்து முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் விளாசியுள்ளார். அதில், இந்திய அணி, ஆசிய கோப்பை தொடருக்கு புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் என 3 பேருடன் மட்டுமே சென்றது மிகப்பெரிய தவறு. ஏனெனில் ஹர்ஷல் பட்டேல், பும்ரா போன்ற வீரர்கள் இல்லாத போது, முகமது ஷமியை அழைத்து சென்றிருக்க வேண்டும்.

ஓரம் கட்டியது தவறு
இந்திய அணியில் இளம் வீரர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேவேளையில் டி20 உலகக்கோப்பையில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் அவசியம். அப்படி பார்த்தால் முகமது ஷமி கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷமியை ஓரம் கட்டியது தவறு. 2 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வினுக்கு நடந்த அதே சம்பவம் ஷமிக்கும் நடந்துள்ளது.

மீண்டும் ஓரம்கட்டுவதா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. இதில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் பூரண குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் ஆகியோர் உள்ளதால், ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது


Click it and Unblock the Notifications