டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஆட உள்ள 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி காலேயில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி 20 - 24ம் தேதி வரையும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையும் கொழும்பில் நடக்கிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 6 முதல் 8ம் தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சந்தீப்பட்டீல் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் கூடி வீரர்களை தேர்வு செய்தது.
அணி வீரர்கள் விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், கேஎல் ராகுல், செடேஸ்வர் பூஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாகா (விக்கெட் கீப்பர்), ஹர்பஜன்சிங், புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெங்கு காய்ச்சலால் விளையாட முடியாமல் போன பேட்ஸ்மேன், கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலவே, இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஹர்பஜன் அணியில் நீடிக்கிறார்.