Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதி மோதலுக்கு தயாராகும் அணிகள்

பிரிட்ஜ்டவுன்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முக்கிய கட்டம் நெருங்கி விட்டது. அரை இறுதிப் போட்டியில் மோதும் நான்கு அணிகளும் அணல் பறக்கும் பலப்பரீட்சைக்குத் தயாராகி வருகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றில், கத்துக்குட்டி அணிகளிடம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு முன்னணி அணிகளும் படு கேவலமாக தோற்று பரிதாபமாக வெளியேறின.

இந்தியாவும், பாகிஸ்தானும் உலகக் கோப்பைப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. போட்டியின் கிளாமரும் போய் விட்டது.

சூப்பர் 8 சுற்றிலும் பரபரப்புக்கு சற்றும் குறைச்சல் இல்லை. வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்காவை புரட்டிப் போட்டு விட்டது. வங்கதேசத்திடம் தோற்றதால் முதலிடத்தை இழந்தது தென் ஆப்பிரிக்கா.

ஒரு போட்டியில் கூட தோற்கமால் விளையாடி வந்த நியூசிலாந்து அணி இலங்கை அணியிடம் தோல்வியுற்றது.

அடுத்த அதிரடியாக, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு ஜாம்பவான்களை வென்ற தெம்புடன் இருந்த வங்கதேசத்தை அடித்து நொறுக்கியது அயர்லாந்து.

போட்டியை நடத்தி வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியுள்ளது.

கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய இங்கிலாந்து அணியும் இந்த முறை அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளது.

இப்படியாக அமர்க்களமாக நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டியின் முக்கிய கட்டம் நெருங்கியுள்ளது.

அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளும் தெளிவாகி விட்டன. ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

நான்கு அணிகளில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் ஒரே கண்டத்தைச் சேர்ந்த அணிகள் ஆகும். தென் ஆப்பிரிக்கா ஆப்பிரிக்க கண்டத்தையும், இலங்கை ஆசிய கண்டத்தையும் சேர்ந்த அணிகள் ஆகும்.

இந்த நான்கு அணிகளில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் இதுவரை ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்கு போனதில்லை. இலங்கை ஒருமுறை சாம்பியன் ஆன அணி. ஆஸ்திரேலியா அணியோ இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அத்தோடு இல்லாமல், இந்த முறை அது சாம்பியன் ஆனால் நான்காவது முறையாக சாம்பியன் ஆவதோடு மட்டுமல்லாது, தொடர்ந்து 3வது முறையாக வென்ற புதிய சாதனையையும் அது படைக்கும்.

முதல் அரை இறுதிப் போட்டி ஜமைக்காவில் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது. 2வது அரை இறுதிப் போட்டி செயின்ட் லூசியாவில் 25ம் தேதி நடக்கிறது.

சூப்பர் எட்டு பிரிவில் 2வது இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்தும், 3வது இடத்தைப் பிடித்துள்ள இலங்கையும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

முதல் இடத்தைப் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தைப் பிடித்துள்ள தென் ஆப்பிரிக்காவும் 2வது அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன.

மிக மிக முக்கியமான போட்டி இவை என்பதால் நான்கு அணிகளுமே தங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி வெற்றிக்கு முனையும் என்பதால் இரு ஆட்டங்களுமே அணல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Wednesday, December 7, 2011, 17:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+