மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா வரலாற்று சாதனை
மும்பை: மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 தொடரின் குரூப் ஏ போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு ஷஃபாலி 3000 ரன்களை எட்ட 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளிலேயே 7 ரன்கள் எடுத்து இந்தச் சாதனையை அவர் தனதாக்கினார். மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த அளவாக 2182 பந்துகளில் 3000 ரன்களை எட்டிய வீராங்கனை ஷஃபாலி வர்மா தான்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை அலிசா ஹீலி 2321 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. மேலும், தனது 22 வயது 220 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் 3000 ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனையையும் ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு அயர்லாந்து அணியின் கேபி லூயிஸ் தனது 24 வயது 347 நாட்களில் இச்சாதனையைப் படைத்திருந்தார்.
மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் 3000 ரன்களைக் கடந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா 22 ஆண்டுகள் மற்றும் 220 நாட்களில் இந்த சாதனையை எட்டி முதலிடத்தில் உள்ளார். அயர்லாந்து நாட்டின் கேபி லூயிஸ் 24 ஆண்டுகள் மற்றும் 347 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அணியின் ஈஷா ஓசா தன் 27 வயது 139 நாட்களில் இந்த மைல்கல்லைக் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 27 ஆண்டுகள் மற்றும் 171 நாட்களில் இச்சாதனையை எட்டி நான்காவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹேலி மேத்யூஸ் 27 ஆண்டுகள் மற்றும் 347 நாட்களில் இந்த இலக்கை எட்டி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையை ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார். தற்போது இந்திய அணி சார்பாக ஸ்மிருதி மந்தனா 174 போட்டிகளில் விளையாடி 4690 ரன்களுடன் முதலிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 205 போட்டிகளில் விளையாடி 4249 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஷஃபாலி வர்மா 114 போட்டிகளில் விளையாடி 3005 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.


Click it and Unblock the Notifications


