ஆத்தாடி.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. பின்னாடி அடிச்சு பவுண்டரியைப் பிடிச்ச ஷபாலி!
மெல்போர்ன் : மெல்போர்னில் நடைபெற்ற ஐசிசி டி20 மகளிர் உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்று இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 8 புள்ளிகள் பெற்று ஏ அணியில் முன்னணியில் உள்ளது.
Recommended Video
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் ஆரம்பம் முதலே அசத்தி வருகின்றனர். ஷபாலி வர்மா உள்ளிட்ட இளம் வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா சர்வதேச அளவில் கவனத்தை பெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான தருணங்களை அளித்துவரும் ஷபாலி வர்மா, கடந்த ஆட்டத்தில் ஸ்டம்பின் பின்பக்கத்தில் இருந்து பின்னே சென்று அடித்த பந்து பார்வையாளர்களை 'வாவ்' சொல்ல வைத்தது. மேலும் அவரது பந்தை தடுக்க வேண்டிய கீப்பர் பயந்து திரும்பிக் கொண்டதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்திய மகளிர் அபாரம்
ஆஸ்திரேலியாவில் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கடந்த 21ம் தேதி முதல் துவங்கி வரும் 8ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்கொண்ட இந்திய மகளிர் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் விளையாடி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

விவிஎஸ் லஷ்மன் பாராட்டு
இதனிடையே இந்திய மகளீரின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். 4 போட்டிகளில் 4 வெற்றிகளை கொடுத்துள்ள இந்திய மகளிரணியின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள லஷ்மன், ராதா யாதவ் மற்றும் ஷபாலி வர்மாவிற்கு தனித்தனியாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

பேட்டிங்கிலும் சளைக்கவில்லை
ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி போன்ற வீராங்கனைகள் இந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், ராதா யாதவ், பூனம் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்களும் கவனம் பெற்று வருகின்றனர். குறிப்பாக 16 வயதேயான ஷபாலி வர்மா ஆட்டத்திற்கு ஆட்டம் தன்னுடைய திறமையை அதிகப்படுத்தி வருகிறார்.

துவம்சம் செய்த 16 வயது வீராங்கனை
இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் ஷபாலி வர்மா தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் இந்தியாவை வெற்றியை நோக்கி நடைபோட வைத்துள்ளார். தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள ஷபாலி வர்மா முதல் 3 போட்டிகளில் மட்டுமே 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 114 ரன்களை குவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் 47 ரன்களை அடித்துள்ளார்.
சிறப்பான பவுண்டரி
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 9வது ஓவரில் ஆடிக் கொண்டிருந்த ஷபாலி, ஸ்டம்பிலிருந்து சிறிது பின்வாங்கி அடித்த பந்து, பவுண்டரியை சந்தித்தது. அவரின் இந்த மூவ், அனைவரையும் வாவ் சொல்ல வைத்தது. மேலும் அவரது பந்திலிருந்து தன்னை காத்துக் கொள்ளும்வகையில், இலங்கை கீப்பர் திரும்பிக் கொண்டதும் அவரது ஆட்டத்தின் பெருமையை தெரிவித்தது. இதனிடையே டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications