“இப்பவே இலங்கையை விட்டு பாகிஸ்தான் கிளம்புறேன்” ஆத்திரமடைந்த ஷாஹீன் அப்ரிடி.. LPL தொடரில் சர்ச்சை
கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில், கண்டி ராயல்ஸ் அணி நிர்வாகம் செய்த குளறுபடி காரணமாகப் போட்டியில் ஆட முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, தொடரிலிருந்து விலகி பாகிஸ்தான் திரும்பப் போவதாக எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 லங்கா பிரீமியர் லீக் தொடரில், ஐபிஎல் தொடரைப் போலவே 'இம்பாக்ட் பிளேயர்' விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, கண்டி ராயல்ஸ் அணி நிர்வாகம் அப்ரிடியை இம்பாக்ட் பிளேயராக களமிறக்க முடிவெடுத்திருந்தது. ஆனால், போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கண்டி அணியின் டேட்டா அனலிஸ்ட் செய்த தவறால் போட்டி நடுவரிடம் அளிக்கப்பட்ட இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் ஷஹீன் அப்ரிடியின் பெயர் விடுபட்டதாக பயிற்சியாளர் மன்னிப்புக் கோரினார்.

இதனால் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அப்ரிடி, இச்சம்பவம் குறித்து தொடரின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் உடனடியாகப் புகார் அளித்தார். மேலும், இலங்கையை விட்டு வெளியேறி பாகிஸ்தான் திரும்பப் போவதாகத் தெரிவித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கண்டி ராயல்ஸ் நிர்வாகம் மற்றும் தொடர் அமைப்பாளர்கள் அப்ரிடியிடம் மன்னிப்பு கேட்டு, அவரைச் சமாதானப்படுத்தி இலங்கையிலேயே தங்க வைத்தனர். கண்டி அணிக்காக இதுவரை ஆடியுள்ள அப்ரிடி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி (1/41, 2/34, 1/32), மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளார்.
ஏற்கனவே இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடர் பல்வேறு சூதாட்டச் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சமீபத்தில், ஜாப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரும் முன்னாள் இந்திய அண்டர் 19 வீரருமான மனோஜ் கல்ரா, வீரர்களுக்கு 30,000 டாலர் வரை லஞ்சம் கொடுத்து போட்டியை மாற்றிமைக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், ஷஹீன் அப்ரிடி விவகாரமும் சேர்ந்து இந்தத் தொடருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
